கலங்கரை விளக்கம்.
கலங்காதே
நீ கலங்கரை விளக்கம்
கடல் கடந்த வரலாறு
காலச் சக்கரத்திலிருந்து
கழன்று போயிருக்கலாம்.
நேற்றுவரை நிமிர்ந்த மரங்களும்
நேர்த்தியாய் கிளைவிடும்
சாலைகளும்
ஊமையாய் மௌனித்திருக்கலாம்
வந்தேறிகள் என்ற தோட்டாக்கள்
எட்டுத் திசைகளிலும் எதிரொலித்து
காது மடல்களைக் கிழித்து
இதயத்தைத் துளை போடலாம்
அரை நூற்றாண்டு வாழ்க்கையை
விழுங்கிய பின்னும்
வறுமை நமது உடல்முழுவதும்
தீப்புண் கோலங்களை வரைந்திருக்கலாம்
தேசியத்தின் துக்க நிகழ்வாய்
ஏழ்மையும் இயலாமையும்
கொடிக் கம்பங்களில் அரை நிர்வாணமாய்
காற்றில் வசை பாடலாம்
இன்னும் அடுக்கடுக்காய்
வார்த்தைகளுக்குக் கட்டுப்படாமல்
இழவுச் சந்தைகளில் விலைபோகும் இனமானம்
விக்கிரமாதித்தனாய் தொடர்ந்து முயன்று
விண்ணப்பங்களையும் கோரிக்கைகளையும்
காற்று தேசத்தில் தூசுத்
தட்ட
அனுப்புகிறோம்
அவை வான மண்டலத்தில் மழைமேகக்
கூட்டங்களாய்
ஒரு பகல் பொழுதும்
வெளிச்சத்தைத் தொலைத்துக்
கொண்டது
ஒரு சூரிய பந்து
இருப்பினும் எங்களுக்குள்
இன்னும் மிச்சமிருக்கிறது
வைக்கோல் போருக்குள் வைத்த
ஒரு நெருப்புத்துண்டு...
நம்பிக்கையாய்!
No comments:
Post a Comment