Tuesday, 11 February 2014

வரலாறும் வற்றிய ஆறும்


எங்கள் வரலாறும்
வற்றிய ஆறும் ஒன்றுதான்!

கால்கடுக்க
நடந்த ஆறுகள் 
பொலிவிழந்து
வற்றிய மார்போடு
சுவடுகளை இழந்து...

வந்தேறிகளின் தேடல்களில்
அடிக்கடி
தூசு தட்டப்பட்டு
துணிவிழந்த துச்சாதனாய் நாங்கள்

நெஞ்சுக் கூடுகளில்
ஈரப்பசைகள்
இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கும்
வானார்ந்த எதிர்பார்ப்புகளோடு
துளிகளுக்கு
விண்ணப்பங்களைப் போட்டு
விண்ணுக்குத்
தவம் கிடக்கின்றோம்
அருவியா விழப்போகிறது?

வீதிகளில் கத்திக் கத்தி
தெரு ஆர்ப்பரிப்புகளில்
கோரிக்கைக் கொடிகள்
தொண்டை குழாய்கள்
காய்ந்ததுதான் மிச்சம்

மாற்றங்கள்
படையெடுத்து வருமென்று
வீதிகளில் விழிகளைப்
பதித்து வைத்தோம்

காணல் நீருக்குள்
பூத்துப்போன இருவிழிகள்
அமுதசுரபியும் இல்லை
அதனால் பிச்சைப் பாத்திரங்களை
வெறுமையோடு
கைகளில் ஏந்திக்கொண்டு
தட்டித் தட்டிக் கேட்கிறோம்
நொந்துபோன கரங்கள்

விரதங்களுக்கும் வேண்டுதல்களுக்கும்
முகங்காட்ட
கடவுளின் முன்னே
மண்டியிட்டு
முட்டி முட்டிக் கேட்கிறோம்
இடிந்துபோன இளமனசு

அறுந்துபோன
நம்பிக்கைக் கம்பிகளில்
கம்பீர நடைப் பயணம்
ஏலனமாய்க் கைத்தட்டி
வேடிக்கைப் பார்க்கும் கூட்டம்

ஒவ்வொரு முறையும்
தொங்கும்போதும்
கால் இடறி
தலை கீழாய் விழும்போதும்
உலகம் அதிரும்
சிரிப்பலைகள்

விழுவது தொடர்கதையாய்
எழுவது எப்போது?
ஏமாற்றத்தோடு திரும்புகிறோம்
இன்னும்
ஒட்டிக்கொண்டிருக்கும்
நம்பிக்கைக் கம்பிகள்.



நிரம்பி வழியும் தரித்திரம்


நாமும், இவர்களும், அவர்களும்
எல்லோரும்
ஒன்றாகத்தானே
புதையல்களைத் தோண்டுவதற்கு
இந்தக் கரைகளில்
தட்டுத் தடுமாறி
பாதங்களைப் பதியம் வைத்தோம்?

அதெப்படி
இன்னும் நமது பாத்திரங்களில் மட்டும்
தரித்திரம்
நிரம்பி வழிகிறது?

இவர்களும் அவர்களும்
எப்படி எப்படியோ
இறகுகளைச் சேகரித்து
வானத்தை முட்டும்
ஏணிப் படிகளில் ஏறி
ஓசோன் கூறைக்கு
வெள்ளையடிக்கிறார்கள்?

இன்னும்
நமக்கு எட்டவில்லை
வானத்து வில்லில்
ஊஞ்சல் கட்டுவதற்கு!

நொந்துபோன மனதோடும்
எரிந்துபோன வயிரோடும்
எலும்புக்கூட்டுக்குள்
ஈரடிக்கும் ஆறடிக்கும்
இழவுச் சண்டையில்
கல்லறையாய் நிற்கிறோம்

அவர்களும் இவர்களும்
நாளைய நாட்களுக்கு
நம்பிக்கை பூட்டுவதற்கு
அங்கும் இங்குமாய்க்
குடிசைகளைப் போட்டார்கள்
அதன் கூறைகளே
அவர்களுக்கு வானமானது!

நாமும் சலைத்தவர்களா?
முயலாமல் இல்லை!
அடிக்கல் நாட்டு விழாக்களோடும்
சிறப்புப் பூசைகளோடும்
அடிக்கடி ஒத்திவைக்கப்படுகிறது
கட்டட அடிக்கல் நாட்டுவிழா
அதனால்
இன்னும் இங்கு
வானமே கூறைகளாய் நிற்கிறது

அவர்களும் இவர்களும்
இரட்டைமாடிக் கோபுரத்தின் உச்சியை
விலைக்கு வாங்கி
எழுச்சி மாநாடுகளைத்
தொடர்கதைகளாய் நடத்தும்போது

ஒரு முச்சந்திக் கூடவா
கிடைக்காமல் போகும்
எங்களுக்கும்
ஒரு மாநாடு நடத்துவதற்கு
அடுத்த வீழ்ச்சியை நோக்கி!


சமாதி நிலை


மூன்றாவது நிலை
நேற்றோடு மலையேறிவிட்டது
இன்றுமுதல் நான்காவது நிலை
நமக்கு

ஏமாளிகளுக்கு
ஏமாற்றம் புதிதல்ல!

கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை
பரிசுகளையும் பாராட்டுகளையும்
இழந்த மனசு

இருபது இருபதும்
ஒரே மலேசியமும்
நாளைய நம்பக நாட்கள்
இருந்தும் நமக்கென்ன?

நகரும் நாட்களில்
நாடும் வளர்கிறது
நமது நகமும் வளர்கிறது

தொழிற்புரட்சியில்
நறுக்கப்படும் காடுகளும்
நெறிக்கப்படும் விலங்குகளின்
மரண ஓலங்களும் காற்றில்

நகங்களை விட்டு
நமது விரல்கள் நறுக்கப்படுகின்றன
பல விண்ணப்பங்களில்

விரல்களுக்குப் பிறகு
கட்டப்பட்ட கரங்களும் அறுபடலாம்
நாம் முடவனாய்
ஆனால்
இன்னும் மூடனாய் இல்லை!

ஒவ்வொரு உருபுகளாய்க்
கிள்ளிப் போட்டாலும்
மீண்டும் மீண்டும் முளைத்தெழிவோம்!

பாவம்
அவர்கள் ஏமாந்து போவார்கள்
தொடர்ந்து நறுக்கட்டும்
ஏமாளிகளுக்கு
ஏமாற்றம் ஒன்றும் புதிதல்ல.



திருவோடு ஒரு தெருவோடு



கோரிக்கைகள்
பேசிப் பேசியே
பழக்கப்பட்டுப் போய்விட்டது

எழுவதும், உழுவதும்
கட்டிலில் விழுவதுமாய்
நகரும் நாட்கள்

கனவுகளின் பட்டியலில்
அடுக்கடுக்காய்
வானத்தை முத்தமிடும்
நட்சத்திரக் குவியல்

பொதுமைப் பார்வையில்
பாரெங்கும் புதுமைகள் செய்தோம்

சுழற்றி எறியும் உடைகளாய்
ஒவ்வொன்றாய் இழந்தோம்
உடைமைகளை

அலட்சிய பூகம்பத்தில்
புதைந்தும் கலைந்தும்போன
பள்ளிகளும் கோவில்களும்

தொழிற்புரட்சி தோண்டிய
பிணக் குழிகளில்
சமாதியான தோட்டங்கள்

கேட்காமலேயே விட்டதால்
நாணத்தோடு விலகிச் செல்லும்
மறந்துபோன உரிமைகள்
சாணையில்லாமல் மழுங்கிக் கிடக்கும்
அரசியல் வாள்கள்

இருந்தும் என்ன?
மேடைகள் எங்கள் அழகுத் தமிழுக்கு
மணிமகுடங்கள்
அதனால் ஊரான் பிள்ளையை
நம்பிக்கையோடு ஊட்டி வளர்க்கின்றோம்

எங்கள் பிள்ளைகள்
தெருவின் மூலை முடுக்குகளில்
ஒரு விடியலில் வெளிச்சமாய்க்

கையில் திருவோடு!
கலங்கரை விளக்கம்.



கலங்காதே
நீ கலங்கரை விளக்கம்

கடல் கடந்த வரலாறு
காலச் சக்கரத்திலிருந்து
கழன்று போயிருக்கலாம்.

நேற்றுவரை நிமிர்ந்த மரங்களும்
நேர்த்தியாய் கிளைவிடும் சாலைகளும்
ஊமையாய் மௌனித்திருக்கலாம்

வந்தேறிகள் என்ற தோட்டாக்கள்
எட்டுத் திசைகளிலும் எதிரொலித்து
காது மடல்களைக் கிழித்து
இதயத்தைத் துளை போடலாம்

அரை நூற்றாண்டு வாழ்க்கையை
விழுங்கிய பின்னும்
வறுமை நமது உடல்முழுவதும்
தீப்புண் கோலங்களை வரைந்திருக்கலாம்

தேசியத்தின் துக்க நிகழ்வாய்
ஏழ்மையும் இயலாமையும்
கொடிக் கம்பங்களில் அரை நிர்வாணமாய்
காற்றில் வசை பாடலாம்
இன்னும் அடுக்கடுக்காய்
வார்த்தைகளுக்குக் கட்டுப்படாமல்
இழவுச் சந்தைகளில் விலைபோகும் இனமானம்

விக்கிரமாதித்தனாய் தொடர்ந்து முயன்று
விண்ணப்பங்களையும் கோரிக்கைகளையும்
காற்று தேசத்தில் தூசுத் தட்ட அனுப்புகிறோம்
அவை வான மண்டலத்தில் மழைமேகக் கூட்டங்களாய்

ஒரு பகல் பொழுதும்
வெளிச்சத்தைத் தொலைத்துக் கொண்டது
ஒரு சூரிய பந்து

இருப்பினும் எங்களுக்குள்
இன்னும் மிச்சமிருக்கிறது
வைக்கோல் போருக்குள் வைத்த
ஒரு நெருப்புத்துண்டு...
நம்பிக்கையாய்!


நான் நானில்லை...



நினைவிலில்லை
மறந்துபோகிறது
ஞாபகப்படுத்துவதற்கு

ஒவ்வொரு கோணத்திலும்
தோய்வுகளில்
சரியும் தேகம்

அத்துமீறிய
இருள் திரள்கள்
ஒரு வெளிச்சத்திற்குள்

மறந்துபோன
மறதி கூட்டுக்குள்
முனகல்

விரிந்துகிடக்கும்
பாதைகளில்
முடமான பாதம்

விடியலில்கூட
மூடியே கிடக்கும்
விழிகள்

வெறுமையாய்போன
பஞ்ச மூலங்களில்
அழுகிய வீச்சம்

விரல் இடுக்குகளில்
பற்றவைத்த
தீப்பந்தங்களில்
குளுமை

நானும் நானுமாய்
தேடிக்கொண்டிருக்கும்
நான்.


சமாதியாகும் வரலாறு





மகாபாரதமும் இராமாயணமும்
புளித்துப்போனது
சிலப்பதிகாரமும் மணிமேகலையும்
கசந்து போனது

எங்களது
அறத்தேடல்களுக்கு
இங்கு
மாயையாய் பதில்

அடுக்கடுக்காய்
நகரும் பொழுதுகள்
மிடுக்காய் ஒன்றுமில்லை

தொலைந்துபோனதும்
தொலைத்ததும்
தவறியதும்
தவறவிட்டதும்
ஒரு போகிக்குள் சாம்பலானது

மருட்டிப் பார்க்கும்
உலகப் பந்து
உருப்படியாய்
வாழ்வதற்கு தடயம் இல்லை.

கைகளின் முடிச்சுகள்
அவிழ்க்கப்படாமல்
வாய்களுக்குப் பூட்டு

சுதந்திரம்
என்ன விலை?
உலகச் சந்தையில் பேரம்.

ஒரு சொட்டு
மூச்சுத் துளி
திணறிய
நாசிகளின் புலம்பல்

விரிந்து கிடக்கும்
பூமி
நம்மைப் பார்த்து
கைவிரித்தவாறு.

உதிரம் சிந்தியவர்களாய்
மேடைகளில் முழக்கம்

நாட்டை
விளைத்தவர்களாய்
ஏடுகளின் தலையங்கம்

விமர்சனவாதிகளின்
வெண்சாமரம்
புழுதிக்குள் புதைந்துபோகும்
தரவுகள்

ஒன்றும் தெரியாததாய்
புதிய விடியல்
சலவை செய்த
சூரியனின் புறப்பாடு

சிசுக்களுக்கு
கருவிலே மறக்கக்கற்றுக் கொடுக்கும்
வியூகம்
நமது தடயங்கள்

ஆடைகள்
களையப்பட்டு
நிர்வணமாய் வந்தேறிகள்

விலா எழும்புகளை
வில்லாய் முறித்து
தூக்கி நிறுத்திய
முதல் தலைமுறை

இன்றைய தலைமுறை
தேசியத்தில்
அடையாளத்தை
அடகு வைத்து
அந்நியமாய்

மாலை
ஒளித் துளிகளை
உறிஞ்சியவாறு
மெல்ல நகரும்
இருள் மேகங்கள்

இருட்டுக்குள்
எல்லாமே சமாதியாய்

நமது வரலாறும்.
நலிந்த நம்பிக்கைகள்



தேர்வு முடிவுகள்
வானைப் பிளக்கும்
கைத்தட்டல்கள்

மாலைகளின் குவியல்களில்
முகங்கள் மறைந்துபோயின.

மனப்பாத்திரங்களில்
நிரம்பி வழியும்
பாராட்டுத் திரவகங்கள்

வரலாற்றுத் தரவுகளாய்
பதியம் செய்யும் ஏடுகள்

கனவுகளை மறந்து
நனவுகளில்
குளிர்காயும் முகங்கள்

வாசலிலும்
கம்பிகளிலும்
பதியம் செய்த விழிகள்

ஆசை அணைகளை
முட்டிக்கொண்டு
எதிர்ப்பார்ப்புகள்

வண்ணக்கலவையில்
தோய்த்து
சலவை செய்த மனங்கள்

மௌனமாய் நகரும்
போர்க் காலங்கள்
கால்களால்
கோலத்தை அழித்தவாறு

கருப்பு வானத்தின்
அந்தித் துளிகளில்
மெதுவாய் கலையும் சாயங்கள்

வழுக்கி விழும்
இரவுப் போர்வையில்
வெளிச்சத்தின் பூபாளம்

பனிப்பொழுதில்
மொட்டவிழும் பூக்கள்
வாடியவாறு.




போராட்டங்கள்



போர்முனைகளில்
கூராயுதங்கள்
அணு ஆயுதங்களும்
கண்டிராத போராட்டம்

ஒவ்வொரு துளியாய்
நனையும் 
வாழ்க்கையின் முனைகள்

வெளிச்சப்படலத்தின்
வெளிநடப்பு
தற்காலிகமாய் ஒத்திவைப்பு

இப்பொழுது
காற்றும்
கற்றுக் கொண்டது
அவலங்களைக்
காதுகொடுத்துக் கேட்பதற்கு

எங்கள் பெயரும்
சிம்மாசனங்களில்
முன்மொழிவு
ஒரு சுவடிப்பு !

இங்கு எல்லாமே
வாடிக்கையானது
விழுந்தவர்களுக்கு!
வேடிக்கையானது
பார்ப்பவர்களுக்கு!

சிகரங்களைத் தொடுவதற்கு
வரிசையாய்ப்
போடப்பட்ட ஏணிகள்
கால்மிதிகள் இல்லாமல்

தேடல்களின் முயற்சிகள்
அரும்புவிடும்
நம்பிக்கை மொட்டுகளை
இரசித்தவாறு

உச்சங்களில்
இழுத்துச் சேர்ப்பதாய்
நின்று கொண்டு
வேடிக்கைக் காட்டும் கூட்டம்

ஏணிகளைப் பிடித்தவாறு
நாங்கள்
யார் ஏறுவது?
யார் தூக்கிவிடுவது?
போராட்டம்

இன்னும் தீர்ந்த்தாய் இல்லை
போராட்டம்
ஏக்கத்தோடு ஏணிகள்
நாளைய விடியல்களை
அடகு வைத்தவாறு !



விதி


எல்லாம் விதி
புலம்பலில் நாமும்
எங்கோ ஒரு வீதியில்

கிடைக்காதவைகளின்
பட்டியலின் நீளத்தில்
இறுதி பக்கத்தில்
விதியின் கையொப்பம்

ஆமோதிக்கும்
எண்ண அலைகளில்
குமரிக்கண்டமாய் நாமும்

தோட்டங்களையும்
தொடர்கதையான
அகன்ற சாலைகளையும்
அடிக்கடி காட்சி
சமைக்கின்றோம்

ஒரு நூற்றாண்டாய்
புலம்பல் புழுதி வீசியவாறு
மடிந்துபோன
நம்பக நாட்கள்

கிரக நகர்வுகளிலும்
கூட்டு எண்களிலும்
அடிக்கடி
மாறிப்போகும்
நமது
அடையாளங்கள்

வானத்தைத் தொட்டதாய்
பிரமிப்பு
இமயத்தை வென்றதாய்
ஆர்ப்பரிப்பு

ஏந்திய கைகளில்
விருட்சங்கள்
காலடியில் விரிந்து கிடக்கும்
பூமி

இன்னும்
வானம் பார்க்கிறோம்
நாளைய துறலுக்காக

அலுத்துக் கொண்டு
உள்ளுக்குள்
புழுங்கும் மனம்
எல்லாம் விதிப்படி!