Monday, 7 July 2014


இதமாய்

உரசிப்போன

தென்றல்

காதோரமாய்

முணுமுணுத்தது

உன் நாமத்தை

 

என்னைக் கடந்து போகும்

தபால்காரர்

ஏக்கத்தோடு

என் விழிகள்

 

வானில்

நிலவு ஊர்வலம்

மனதிற்குள்

உன் திருமுகம்.

 

வெற்றுக் காகிதம்

முழுமையும்

எழுதிப் பார்க்கிறேன்

உன் பெயரை

 

மெல்லிய அலைகள்

பாதங்களை

வருடியவாறு

தேடிப்பார்க்கிறேன்

நேற்றைய

உன் பதிவுகளை

அலைகள்

வருடியவாறு.

 

விடியல்

அடிவானில்

முளை போட்டது

ஆர்ப்பரிக்கும்

ஆரவாரம்

நான் மட்டும்

புத்தனாய்

உன் கனவுகளோடு

 

 

எழுதிய கவிதை

திருத்த மனமில்லை

வரிகளை

மீண்டும் மீண்டும்

அசைபோடுகிறேன்

உன் நினைவுகள்.

 

இன்று மட்டும்

விடியாமலேயே இருக்கட்டும்

நீளும்

உன் கனவுகள்.

 

கிளைவிடும்

சாலைகள்

இளைபாறலில் கால்கள்

பரிதவிக்கும் மனம்

எங்கே

உன் சுவடுகள்?

 

ஒரு நந்தவனம்

பொழுது சாய்கிறது

மலர் மணம்

குயில்களின் கீதம்

தாலாட்டும் தென்றல்

உணர்வுகள்

உசுப்புகின்றன

நீ பக்கத்தில் இருப்பதாய்.

 

கிளை இடுக்கில்

கூடு போடுவதற்கு

இறகுகளை

ஒவ்வொன்றாய்

சுமந்து வரும் பறவைகள்

மன இடுக்கில்

கொஞ்சம் கொஞ்சமாய்

நான் சேகரித்த

உன் நினைவுகள்.

No comments:

Post a Comment