Tuesday, 29 March 2011

அஃறிணையாய்......

நேசத்திற்குரிய
கோழையே!

உன்னால்
என் பேனா
மீண்டும்
உயிர்த்தெழுகிறது

கார்காலத்தில்
ஒரு நாள்
வியர்த்துக் கொட்டிய
ஓர் இரவில்
உன் நனவு
என் உறக்கத்தைக்
களைத்துப் போட்டது.

நீயும்
உன்னைப் போன்றோரும்
அடிக்கடி
உசுப்பி விடுகிறீர்கள்
எங்கள் தலைவர்களை

அதனால்
எப்பொழுதும்
ஐந்தாண்டுகளுக்கு
ஒரு முறை
அறிக்கை விடுபவர்கள்
இப்பொழுது
அடிக்கடி விடுகிறார்கள்
உன் மரணத்தில்

உன்னை
வார்த்தைத் தோட்டாக்களில்
துளை போடுவதற்குள்
கொஞ்சமாய்ப்
பாராட்டுகிறேன்

இந்த
அசட்டுத் தைரியம்
எமனுக்குக் கூட
வராது

எதிர்ப்பார்ப்புகள்
கடலாய்க்
கம்பளம் விரிக்க
எப்படி
இந்த
ஒற்றையடிப் பாதையில்
சிந்து பாடுகிறாய்?

கிடைக்கவில்லையென்றால்
எடுத்துக் கொள்கிறாயே
உயிரைத்
தற்கொலையென்ற
உடன்படிக்கையில்

அப்படியென்றால்
நீ
கருவிலேயே
விலகியிருக்க வேண்டும்
மற்ற
சகோதர் அணுக்களுக்கு
வழிவிட்டு

அறுபதுகளில்
அறுத்துப்போட வேண்டிய
ஆசை விழிதுகளை
இருபதுகளிலேயே
அறுத்து விட்டாயே?

தன்னம்பிக்கை
ஆயுதங்களை இழந்து
போர்க்கள முச்சந்தியில்
நீ மட்டும்
நிராயுதபாணியாய்.....

நிம்மதியாய்
நீ மட்டும்
பாடையில்
தாயும் தந்தையும்
உடன் பிறப்புகளும்
உடன்கட்டையில்...

கோழையே?
கொலை வெறியனே?
எதற்கு
ஆர்ப்பரிக்கிறாய்
சுனாமியாய்

வழுக்கிவிழும்
சூரியனும்
அவிந்துபோகும்
நட்சத்திரமும்
தேய்ந்துபோகும்
நிலவும்கூட

மீண்டும் மீண்டும்
உதிர்ந்த மலராய்
உயித்தெழும்போது

அஃறிணையும்
உயர்திணையாய்.........

நீ மட்டும்
அஃறிணையாய்.!

19 comments:

  1. நண்மர் மணி, உங்கள் சொற்போரோடு நான் சில சமயம் மற்போர் செய்கிறேன்.பின்னர் மெல்லப் புரிந்து உவப்படைகிறேன்.உங்கள் வீச்சு வில்லம்பாய்ப் பாய்கிறது.இப்படி சொற்பமான கவிஞர்களையே காண முடிகிறது இந்த மலேசிய மண்ணில்.எப்போதுமே வலைப்பூவுலக்குள் நுழைபவர்கள் நம் படைப்பை பலர் படிப்பார்கள் என்று வந்து பின்னர் அது நடக்கவிடில் சோர்ந்து போகிறார்கள். ஆனால் நாம் புனைவதை வாசிக்கும் சொற்ப மனிதர்களே நம் ஆதர்ஸர்கள். கவிஞனுக்கு அவ்வளுவுதானே கிட்டும்.அவர்கள்தானே நம் வாடிக்கையாளர்கள். அவர்களுக்காக தொடர்ந்து எழுதுங்கள் எழுதுங்கள்.

    ReplyDelete
  2. நான் நானில்லை...




    நினைவிலில்லை
    மறந்துபோகிறது
    ஞாபகப்படுத்துவதற்கு

    ஒவ்வொரு கோணத்திலும்
    தோய்வுகளில்
    சரியும் தேகம்

    அத்துமீறிய
    இருள் திரள்கள்
    ஒரு வெளிச்சத்திற்குள்

    மறந்துபோன
    மறதி கூட்டுக்குள்
    முனகல்

    விரிந்துகிடக்கும்
    பாதைகளில்
    முடமான பாதம்

    விடியலில்கூட
    மூடியே கிடக்கும்
    விழிகள்

    வெறுமையாய்போன
    பஞ்ச மூலங்களில்
    அழுகிய வீச்சம்

    விரல் இடுக்குகளில்
    பற்றவைத்த
    தீப்பந்தங்களில்
    குளுமை

    நானும் நானுமாய்
    தேடிக்கொண்டிருக்கும்
    நான்.

    ReplyDelete
  3. அப்பா இல்லாத தீபாவளி





    அப்பொழுது இல்லாத வலி
    இப்பொழுது
    எங்கிருந்து வந்தது?
    வெள்ளி முளைக்கும்
    ஒரு தீபாவளி

    தீபாவளி நெருக்குதல்
    அக்கம் பக்கமெல்லாம்
    ஒரே பரபரப்பு
    ஆர்பரிப்பு
    பட்டாசுகளும் வானவேடிக்கைகளும்

    வெறுச்சோடி கிடந்தது
    என் வீடும்
    என் மனமும்
    எனக்குள் எல்லாமே சூன்யமாய்

    நாற்பத்து ஐந்து ஆண்டுகள்
    எத்தனை தீபாவளிகள்
    அப்பாவோடு
    ஞாபக நாட்களில்
    இன்னும் பசுமையாய்
    ஒட்டிக்கொண்டிருக்கிறது

    என்னிடமும்
    இந்த மண்ணிடமும்
    சொல்லிக் கொள்ளாமல்
    அப்பா அவசர அவசரமாய்
    விண்ணுலகத்திற்கு
    விடைபெற்ற
    இந்த ஆண்டு
    இந்த தீபாவளியல்ல
    எல்லா தீபாவளிகளையெல்லாம் கூடவே
    கொண்டுபோய் விட்டார்

    நினைத்துப் பார்க்கிறேன்
    ஒருமுறையாவது
    அவருக்கு
    நன்றி சொல்லியிருக்கிறேனா?

    வேள்வியாய்த் துடிக்கும்
    மனம்
    கடந்த தீபாவளிகளை
    அசைபோட்டவாறு

    ஆசை ஆசையாய்
    அவர் வாங்கிக் கொடுத்த
    அந்தப் புத்தாடைகள்
    எனக்குப் பிடித்ததோ
    நினைவிலில்லை
    அவருக்குப் பிடித்திருந்தது

    ஒன்றே ஒன்று என்று
    எனக்கு
    எத்தனை சலுகைகள்

    அன்பாய் அவர்
    தட்டிவிட்ட பொழுதெல்லாம்
    நொந்து போனவன்
    இப்பொழுது
    நினைத்துப் பார்க்கிறேன்
    இந்த உச்சத்தில்
    நான் ஏறிநிற்கும்
    ஏணிப்படிகள்தான் அவை

    அந்த வடுக்கள்
    நேற்றோடு
    காணாமல் போனது
    அவரில்லா ஓர் ஏக்கத்தில்

    அப்பாவின்
    அந்தச் சின்ன வீடு
    எத்தனை முறை
    ஏளனமாய் வெறித்திருக்கிறேன்
    வசதிகளே இல்லை என்ற
    என்னுடைய குற்றச் சாட்டு
    உள்ளுக்குள் முள்ளாய்த் தைக்கிறது

    அது ஒரு குருவிக்கூடு
    அப்பாவும் அம்மாவும்
    உடன் பிறப்புகளோடு நானும்
    அன்புச் சங்கிலியில்
    கட்டிப்போட்டது

    ஒவ்வொரு நாளும்
    அந்த வீட்டுக்குச் சென்று
    திரும்பும்போதெல்லாம்
    அப்பாவின் நினைவுகள்
    எனக்குள் உயிர்த்தெழுகின்றன

    வீட்டின்
    ஒவ்வொரு மூலையும்
    மௌனமாய் ஊடுருவும்போது
    இப்போதுதான்
    அதன் நேர்த்தியும்
    அப்பாவின் உழைப்பும்
    கண்ணில் படுகிறது

    அப்பா சிந்திய
    வேர்வைத்துளிகளின் மணம்
    இன்னும் காற்றில் கலந்து
    அந்தச் சின்ன வீட்டிற்குள்
    தோரணமாய்

    சுண்ணாம்புக் கற்களைக்
    கொதிக்கவைத்து
    நான் விரும்பிய வண்ணத்தில்
    தோய்த்து
    சுவர்களுக்குப் பூசிய
    அந்த ஒவ்வொரு ஆண்டும்
    அடுக்கடுக்காய் மனத்திரையில்
    இன்னும்
    சந்தனம் பூசிக்கொண்டிருக்கிறது

    அன்றைய நாட்களில்
    சரவெடிகளுக்குப் பயந்து
    தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்த
    பயவுணர்கள்
    இடம் தெரியாமலேயேபோனது
    அப்பா என் கைகளைப் பிடித்து
    தைரியத்தைப் பற்றவைத்தபோது

    சைக்கிள் பயணத்திலேயே
    அவருடைய
    பாதி ஆயுள் கழிந்தது
    நல்ல ஆரோக்கியத்தோடு

    பின்னால் உட்கார வைத்து
    மூச்சிறைக்க
    அவர் பயணித்த
    அந்த மலைப்பகுதிகள்
    இன்னும் எனக்குள் மலையாய்

    இத்தனை தீபாவளிகளை
    நான் அவரோடும்
    அவர் என்னோடும்
    மகிழ்ச்சிப் பகிர்வுகள்
    பட்டியலுக்கு அப்பால்

    இன்று
    அப்பா என்னோடு இல்லை
    நான் மட்டும் தனிமையில்
    அர்த்தம் தொலைந்துபோன
    ஒரு தீபாவளி

    பொலிவிழந்த
    என்னுடைய பெரிய வீடு
    புத்தாடைகள் இல்லை
    பட்டாசுகளும் இல்லை
    பதார்த்தங்களின் மணமும் இல்லை

    இன்னும்
    அந்தச் சின்னவீடும்
    அப்பாவின் நினைவுகள் மட்டும்
    இந்தத் தீபாவளி இரவில்
    அகலாய்
    மனதிற்குள்
    ஒளி பிழம்பாய்ச்
    சுடர் வீசுகிறது.

    ReplyDelete
  4. திருவோடு ஒரு தெருவோடு




    கோரிக்கைகளைப்
    பேசிப் பேசியே
    பழக்கப்பட்டுப் போய்விட்டது

    எழுவதும், உழுவதும்
    கட்டிலில் விழுவதுமாய்
    நகரும் நாட்கள்

    கனவுகளின் பட்டியலில்
    அடுக்கடுக்காய்
    வானத்தை முத்தமிடும்
    நட்சத்திரக் குவியல்

    பொதுமைப் பார்வையில்
    பாரெங்கும்
    புதுமைகள் செய்தோம்

    சுழற்றி எறியும் உடைகளாய்
    ஒவ்வொன்றாய் இழந்தோம்
    உடைமைகளை

    அலட்சிய பூகம்பத்தில்
    புதைந்தும் கலைந்தும்போன
    பள்ளிகளும் கோவில்களும்

    தொழிற்புரட்சி தோண்டிய
    பிணக் குழிகளில்
    சமாதியான தோட்டங்கள்

    கேட்காமலேயே விட்டதால்
    நாணத்தோடு
    விலகிச் செல்லும்
    மறந்துபோன உரிமைகள்

    சாணையில்லாமல்
    மழுங்கியே கிடக்கும்
    அரசியல் வாள்கள்

    இருந்தும் என்ன?
    மேடைகள்
    எங்கள் அழகுத் தமிழுக்கு
    மணிமகுடங்கள்
    அதனால்
    ஊரான் பிள்ளையை
    நம்பிக்கையோடு ஊட்டி வளர்க்கின்றோம்


    எங்கள் பிள்ளைகள்
    தெருவின் மூலை முடுக்குகளில்
    படரும் வெளிச்சமாய்க்
    கையில் திருவோடு!

    ReplyDelete
  5. நூல் வெளியீடு




    சுவரொட்டிகள்
    வரிசையாய் பதாகைகள்
    வாரியிறைத்த கையேடுகள்

    மாவிலையும் தோரணமுமாய்
    மண்டப வாசலில்
    வரவேற்கும் கோலங்கள்

    மேடை சுவடிப்பு
    சுண்டியிழுக்கும் சுவர் விரிப்பு
    கம்பள விரிப்பில்
    அணிவகுக்கும் விருந்தினர்

    வெளியீடு
    கொஞ்சகாலம் ஒத்திவைப்பு
    வாசகர்கள் இன்னும் வரவில்லை
    தட்டுப்பட்ட தலைகளை
    விரல் விட்டு எண்ணிப்பார்த்தேன்
    ஒரு பத்து உருப்படி தேரும்

    பிரமுகர்கள்
    இனிக்க இனிக்கப் பேசினார்கள்
    எழுதிவந்த கட்டுரைகளை
    வந்தவர்களைவிட
    மேசைகளில் அடுக்கிய புத்தகங்கள்
    அதிகமாய்

    வந்தவர்களிடம்
    சிதறிய கொஞ்சம் சில்லறைகள்
    வறட்டுப் புன்னகையோடு
    எழுத்தாளரின் ஏற்புரை

    எதிர்ப்பார்ப்புகளோடு
    முன்வரிசையில் பதிப்பகத்தார்.

    ReplyDelete
  6. அந்திம காலங்கள்




    வாழ்க்கையில்
    மற்றுமொரு பரிணாமம்
    அழையாமல் எல்லா கோணங்களிலும்
    நரைகளுக்குச் சாயம் பூசுகிறது

    முகச் சுருக்கங்களில்
    மெல்ல எட்டிப்பார்க்கும்
    கடந்த கால நினைவுகள்

    கொடுத்ததும்
    விட்டுச் செல்வதும்
    இங்கு நினைவிலில்லை

    வாங்கியதும்
    வேண்டுமென்றே
    மறதிக்குள் புதைத்ததும்
    நனவுக் கரைகளை அரிக்கின்றன

    கடனாளி என்ற
    குற்றவுணர்வுகளில்
    மனசாட்சி சிறை வைக்கிறது

    ஆயுள் கைதியாய்
    பாவமன்னிப்புகளுக்கு அப்பால்
    நாட்களை அசைபோட்டவாறு

    இளமை முறுக்குகளுக்கு
    முதுமை முக்காடு மாட்டிவிட்டு
    தள்ளி நின்றவாறு
    வேடிக்கைப்பார்க்கிறது

    வாழ்க்கையின்
    வரவு செலவு கணக்குகளின்
    நீட்டோலையில்
    செலவு மட்டும் மிஞ்சியிருக்கிறது

    எஞ்சியிருப்பது
    சொற்ப மணித்துளிகள்தான்
    அதற்குள் கடனை அடைப்பது
    அபூர்வம்தான்

    அதனால்
    இறைவா
    இன்னுமொரு பிறவியைக் கொடு
    எனது வரவில்
    சில்லறைகளையாவது
    வைக்க வேண்டும்

    எதிர்பார்ப்புகளோடு நகரும்
    அந்திம நாட்கள்!

    ReplyDelete
  7. கொஞ்சம் தோள் கொடுங்களேன்





    மெல்லவும் முடியாமல்
    துப்பவும் முடியாமல்
    மன இடுக்குகளில்
    சிக்கிக்கொண்ட சுமைகள்
    அடிக்கடி மிரட்டிப்பார்க்கிறது

    உடலெங்கும் பீதியில்
    உறைந்துபோகும்
    உணர்வுகள்

    நகர்த்த முடியாமல்
    நட்டாற்றில்
    பரிதவிக்கவிட்டு ஏலனமாய்
    நகர்ந்து செல்லும் நாட்கள்

    வேதனைகளை
    ஒவ்வொரு நாளும் விழுங்கி
    அமில நச்சுகளில்
    மனம் புண்ணாகிப்போனது

    வாழ்க்கையின் ஒரு மூலையில்
    வெறுப்பு முடி தறித்து
    சிம்மாசனம் போட்டுக் கொண்டதால்
    உடல் பிண்டமாய்

    நடைபிணமாய்
    மனக் குப்பைகளின் வீச்சம்
    எல்லாமே சூன்யமாய்

    நம்பிக்கை நரம்புகள்
    அறுந்து
    தளர்ந்துபோன வாழ்க்கை

    வாழ்க்கையின்
    உண்மையான
    முகவரியைத் தேடுவதில்
    அடுக்கடுக்காய்த் தோல்விகள்

    விழியணைகளை
    முட்டிக்கொண்டு
    தலையணைகளை
    ஈர்மாக்கிப் பார்க்கும்
    இரவுகள்

    ஆறுதலுக்காக
    இளைப்பாறிப் போகும்
    பழக்கப்பட்ட முகங்கள்

    தோள்கள் வலுவிழந்து
    நகரும் மணித்துளிகளில்
    துடிக்கின்றன
    வேதனை மூட்டைகள் கணக்க

    தேகம் சரிவதற்குள்
    இறுதி மூச்சுக்காற்று
    விடை சொல்வதற்குள்
    இறக்கியே ஆக வேண்டும்

    பரிவோடு
    பார்வையை வீசி எறிகின்றேன்
    யாராவது
    தோள் கொடுங்களேன்.

    ReplyDelete
  8. நினைவில் இனிக்கும் நினைவுகள்



    கடந்தகால நினைவுகளில்
    கல்லூரி வாசலின் கதவு
    திறந்தே கிடக்கிறது
    இன்னும் விழித்திருக்கின்றன
    பழைய முகங்களோடு நானும்

    கல்லூரிக்காலம்
    கரும்பின் வேர்பகுதியைச்
    சுவைத்ததாய் உணர்வு

    சுமைகளைக் கண்டிராத
    விடுதலை காலம்
    தோள்களுக்கு

    சிக்கல்களைத்
    தொட்டுப்பார்க்காத
    தெளிவான நீரோடையாய்
    சலசலக்கும் மனசு

    ஒவ்வொரு முனையிலும்
    எதார்த்தமாய்
    பார்வைகளைப் பதியம் செய்யும்
    புதிய முகங்களின் கைக்குலுக்கல்

    உலகத்தின் விசாலத்தை
    உள்ளங் கைகளில்
    அளந்து பார்ப்பதற்கு
    அற்புதமாய்ப் பாடம் சொன்ன
    விரிவுரை மண்டபங்கள்

    எச்சில் உமிழ்ந்து
    காப்பாற்றிய தேநீர்
    கோப்பைகள்
    கரங்களை இன்னும் சுடுகிறது

    மூன்று ஆண்டுகளாய்
    கொட்டமடித்து
    கூத்தும் கும்மாளமும் போட்ட
    விடுதிகளின் அனுபவங்கள்
    உள்ளுக்குள் வடுக்களாய்

    அழகிய நிலாக் காலங்களில்
    கரங்களைக் கோர்த்துக் கொண்டு
    தோள்களின்மீது சாய்ந்தும்
    கைப்போட்டும்
    துள்ளி நடைப்பயின்ற
    அகன்ற சாலைகள்
    மனத்தரைகளில் நீள்கின்றன

    காலார நீட்டிய கால்களோடும்
    உட்கார்ந்தும் சாய்ந்தும்
    படுத்தும் புரண்டும் இளைப்பாறிய
    நிழல் மரங்களும்
    குளக்கரைகளும்
    மனக்கரைகளில் தென்றலாய்

    தேர்வுக்காலங்களில் மட்டுமே
    விடிய விடிய படித்துவிட்டு
    மறுநாள் தேர்வுக்குப் பிறகு
    விடிய விடிய
    தூங்கிய நினைவுகள்
    இன்னும் எனக்குள் தூங்கவில்லை

    வைரமுத்துவையும் கவிக்கோவையும்
    வாசிக்கவும் சுவைக்கவும்
    கற்றுக் கொடுத்த் நூலகம்
    மன ஏடுகளை
    கவிதையாய் கீறல் போட்டது
    மலையாய் நிற்கிறது


    நட்புக்கும் காதலுக்கும்
    புதிர் போட்டு
    அடுக்கடுக்காய்
    விடுகதைகளைப் போட்ட
    வேள்வி உறவுகள்
    நினைத்தவுடன் சுடுகிறது

    அழகுக்கு
    தாடி வளர்த்ததும்
    அழகியால்
    தாடி வளர்த்ததும்
    மறப்பதாயில்லை

    கல்விப் பயணத்தின்
    ஓர் இறுதி நாளில்
    பட்டமளிப்பு விழாவில்
    நடுங்கிய கரங்களோடு
    மாமன்னரிடம்
    பதற்றத்தோடு பட்டம் வாங்கியது
    மிச்ச நினைவுகளாய்
    ஒட்டிக் கொண்டிருக்கிறது

    அன்றிரவு இறுதியாய்
    ஓர் உணவு விடுதியில்
    பிரியாவிடை
    பழைய முகங்களையும்
    புதிய முகங்களையும்
    பிணைத்துப் போட்டது

    அன்றிரவு
    மௌனம்தான் அதிகமாய் பேசியது
    இனம்புரியாத சோர்வலைகள்
    முகச்சுருக்கங்களில்
    வேதனை வடுக்கள்

    நடுசாமம்வரை
    நகராமலேயே
    நகங்களை முறித்துக்கொண்ட
    விரல்களின் வேதனை

    பழைய முகங்களின்
    அனுபவப் பல்லவிகள்
    புதிய முகங்களுக்கு வேடிக்கையாய்

    ஒவ்வொருவராய்
    அலசிக்கொண்டிருந்தார்கள்
    பழைய கந்தல்களைப் புதுமையாய்

    நிலவை சாட்சி வைத்து
    ஒரு கிளைவிடும் சாலையில்
    மீண்டும் கைகளைக் குலுக்கிக்கொண்டோம்
    விழிமடல்கள் வருடிய வண்ணம்
    கண்ணீர் அருவியாய்

    தேம்பியும் கதறியும்
    வாய்விட்டு அழுது
    கட்டிப் புரண்டோம்

    இதுவரை
    யோசித்துப்பார்க்காத பிரிவு
    வேதனை விழுதுகளாய்
    அன்றைய இரவெல்லாம்
    உறக்கத்தை இழந்து
    நண்பர்களில்லா வெளி உலகத்தை
    அசைப்போட்டு
    அசந்துபோனது

    இரண்டு யுகங்கள்
    எப்படியோ கடந்துவிட்டன

    மனப்பெட்டகத்தில்
    ஒரு மூலையில்
    எண்ணங்கள்
    மூச்சுக் காற்றாய்
    ஒட்டிக்கொண்டிருக்கின்றன

    அவ்வப்போது
    வந்துபோகும் அறிவுப்புகளாய்
    எப்பொழுதாவது மழையில்
    மண் பூசிக்கொள்ளும்
    மண்வாசனயாய்
    எட்டிப்பார்க்கும் பழைய நினைவுகள்

    மனம் எடை பார்க்கிறது
    பொய்யில்லை
    அவை முப்பொழுதுமே
    நெஞ்சில் இனிக்கும் நினைவுகள்.

    ReplyDelete
  9. அடையாளம் தெரியாத நான்



    பல வேளைகளில்
    எனக்கு நானே கேட்டுக் கொண்டும்
    அலசல்களில் தேடிப்பார்த்தும்
    இன்னும் விடுவிக்கமுடியாத புதிராய்

    நான் காற்றா?
    வெளியில் உலாவுவதைப்போல்
    எனக்குள்ளும் தடையே இல்லாமல்
    சுதந்திரமாய் வந்து போகிறது
    புதிர் அவிழ்வதாய் இல்லை
    எனக்கு உருவம் இருக்கிறதே!

    நான் என்ன நீரா?
    உறிஞ்சியும் பருகியும்
    அருந்துபோகா அருவியாய்
    மூலமும் கழிவும் மாறி மாறி
    முழுவதும் குளுமையாய்
    இன்னும் விளங்கவில்லை
    எனக்கு வடிவம் இருக்கிறதே!

    நானும் நெருப்பா?
    தேகம் சுடுகிறது
    வெப்பமாணி அளவையை
    வாசித்துக் காட்டுகிறது
    கட்டை விரல் தொட்டு
    உச்சந்தலைவரை நெருப்பின் அனல்
    விளங்காத புதிராய்
    என்னுள் புகை இல்லையே

    நான் என்ன
    மண்ணா? ஆகாயமா?
    தடயங்கள் தெரிகிறதே
    ஆதாரத்தைத் தேடுகிறேன்
    எல்லாமே மங்களாய்
    தெரிந்துகொள்ள முடியாத
    புதிராய் நானும்

    கொஞ்சம் வெளிச்சமானது
    பஞ்சபூதங்கள்
    உலகைச் சுற்றி பரந்து கிடக்கிறது
    எனக்குள்
    உறைந்து கிடக்கிறது.

    ReplyDelete
  10. தடுமாறிய கால்கள்



    கிளைவிடும் சாலையின்
    முச்சந்தியில்
    மூச்சிறைக்க தடுமாறிய கால்கள்
    நிலைகுத்தின

    பார்வையை அள்ளி வீசி
    நாலாப்பக்கமும் வெறிக்கிறேன்

    பனி மூட்டத்தில்
    மூழ்கிய சாலைகள்
    மெல்லிய கீறலாய்ப்
    பார்வைப் படலத்தில்

    குழப்பத்தில் மனம்
    இலக்கு மறதிப் பெட்டகத்தில்
    ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தது

    கால்கள் துடித்தன
    ஒரு நீண்ட பயணம்
    மிச்சமிருக்கிறது
    இந்தப் பொழுதுக்குள்
    பிள்ளையார் சுழி போட்டாக வேண்டும்

    மனம் இன்னும்
    அலட்சியமாய் சிரித்தது
    நடந்து போகிறவர்களெல்லாம்
    என்னைக் கடந்த வண்ணமாய்
    வறட்டுப் பார்வைகள்

    விலகட்டும் பனிமூட்டங்கள் என்று
    மனம் அடிக்கடி
    ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தது

    வீதி வெளிச்சமானபோது
    யாருமே இல்லை
    எல்லோருமே போய் விட்டிருந்தார்கள்

    நான் மட்டும் தனிமையில்
    தடுமாறிய கால்களோடு
    என்னை எத்தணித்துக் கொண்டு
    கால்களுக்கு முதலடியைக்
    கற்றுக் கொடுத்தபோது

    கோடைப் புழுதியில்
    மீண்டும் பாதைகள் மங்களாய்
    இப்பொழுது
    மனம் பேசியது
    அடுத்தப் பயணம் எப்போது?

    ReplyDelete
  11. உயிர்த்தெழுந்த காதல்





    மனமுகடுகளில்
    அவள் நினைவுகள்
    நகரும் மேகங்களாய்
    உள்ளுக்குள் உரசிக் கொண்டிருந்தது

    கால் நூற்றாண்டாய்
    மன இடுக்குகளில்
    பத்திரமாய்ப் புதைத்துவைத்த
    விதைகள்
    இன்று விருட்சமாய்

    அலையாத விருந்தினராய்
    எனது தனிமையின் அந்தரங்கத்தைப்
    பங்குப்போட்டுக் கொண்டது

    வசந்த காலத்தில்
    பூமியின் வாசல்களில்
    அள்ளித் தெளித்த கோலமாய்

    ஈரக் காற்று
    ஞாபக சுவாசங்களை
    நிரப்பிக் கொண்டிருந்தது
    சொட்டுச் சொட்டாய்
    அவள் நினைவுகள்

    மறதிப் போர்க்களத்தில்
    அவளை என்றோ சாய்த்துவிட்ட
    ஆணவத்தில்
    ஆடிக்கொண்டிருந்த மனசு
    வெட்கித் தலை குனிந்தது

    அவள் மீண்டும்
    எனக்குள் உயிர்த்தெழுகிறாள்
    ஒரு பருவ வாசலில்
    இனம்புரியாத உணர்வுகளுக்கு
    உரையெழுதியவளாய் அவள்

    முப்பத்தாறு மாதங்கள்
    இலையுதிர் காலமாய்
    மன நாட்காட்டியின் ஏடுகள்
    உதிர்த்த வண்ணமாய்

    எப்படி எங்களுக்குள்
    ஒரு மனமுடிச்சு விழுந்தது
    தேடல்களில் புதைந்து போனேன்
    எனக்குள் இன்னும் வெளிச்சமாகாத
    கேள்வியாய் புதிராய்

    அந்த
    நம்பக நாட்களில்
    எவ்வளவோ
    பகிர்ந்து கொண்டோம்

    ஆயிரமாயிரம் மணித்துளிகளை
    சில்லறைகளாய்ச்
    செலவு செய்தோம்
    கணக்கில் வரவு இல்லாமல்
    செலவு மட்டும்
    பட்டியலில் நீண்டுக் கொண்டிருந்தது

    கல்லூரிப் பருவத்தின்
    ஓர் இறுதி நாளின்
    இரவில்
    பிரிவைச் சோகமாய்ப்
    பகிர்ந்து கொண்டோம்
    ஏழை நிலவொன்றை
    சாட்சி வைத்து

    அவள் கயல்விழிகளில்
    கண்ணீர் அருவியாய்
    என் மடியினில்
    முகம் புதைத்து
    மெல்லியக் கதறலாய்
    தேம்பல்
    விட்டும் விடாத தூறலாய்
    கண்ணீர்

    விடியும்வரை
    ஊமை நாடகத்திற்கு
    வசனம் எழுதிக் கொண்டிருந்தோம்
    விடிந்ததும்
    பிரிய முடியாமல்
    காதலுக்கு
    உயில் எழுதிவைத்து
    நம்பிக்கையோடு விடைசொன்னோம்

    கால் நூற்றாண்டு
    கடந்து போயிருந்தது
    நாங்கள்
    எங்களை மறந்துபோயிருந்தோம்
    வெவ்வேறு உலகங்களில்

    அவளைப் பற்றிய தகவல்கள்
    ஒன்றுமேயில்லை
    இரவின் தனிமையில் நகர்ந்தவாறு
    வானத்தை ஊடுருவினேன்

    அதே நிலவு
    என்னைக் கண்டதும்
    ஓடி ஒளிந்து கொண்டது
    மேக மூட்டங்களின் குவியலில்.

    ReplyDelete
  12. காவிய நாயகி




    கடை கடையாய்
    ஏறி இறங்கி
    தேடிப் பிடித்து
    வாங்கி வந்திருந்தேன்
    கையில் சிலப்பதிகாரம்

    தமிழனின் மாண்பும் பண்பும்
    அடுக்கடுக்காய் நேர்த்தியாய்
    சாய்வு நாற்காலியில்
    சாய்ந்தவாறு
    பக்கங்களை
    நகர்த்திக் கொண்டிருந்தேன்

    கொலைக்களைக் காதை
    கோவலன் அறுபட்டது
    பதற்றத்தில் மனம்
    ஒரு கணம்
    அறுந்துபோனது

    கொலைவெறியோடு கண்ணகி
    எல்லாவற்றையும்
    முடித்துக் கொண்டு
    கணவனின் களங்கம் துடைத்து
    கலங்கிய கண்களோடு

    சோகம் என் விழிகளைத் தாலாட்ட
    என்னை மறந்த நிலையில்
    ஆழ்ந்திருந்தேன்

    மெல்லியதாய் புகை மூட்டம்
    தலைவிரிகோலமாய் கண்ணகி
    கையில் ஒற்றைக் கால் சிலம்பு
    களியாட்டம் ஆடுபவளாய்
    வாய்விட்டுச் சிரித்தாள்
    பதறிப்போனேன் !

    அகோரமும்
    கண்ணில் தெறித்த
    கொலைவெறியும்
    களியாட்டமும் கண்டு
    எனக்குள் உயிர்
    உறைந்துபோனது

    பயமும் நடுக்கமும்
    எனக்குள் வேலி போட்டு
    வேடிக்கைக் காட்டியது
    இரக்கமாய்க் கேட்டேன்
    “யார் நீ?”
    “கண்ணகி என்பார்”

    எனக்குள்
    கொஞ்சம் தைரியம் வந்தது
    இம்முறை
    அவளுக்கு ஒரு வழக்குறைகாதையை
    எழுதத் துணிந்தேன்

    “தீர்ந்ததா உன் கோபம்,
    அடங்கியதா உன் கொலை வெறி”
    கேள்விக் கணைகளில்
    துவண்டு போனாள்

    பதிலில்லை
    குற்றவாளிக் கூண்டில் அவள்
    என் நீதிமன்றம்
    நான் மட்டும் நீதிபதியாய்

    கொஞ்சமும் குற்றவுணர்வின்றி
    என்னை வெறித்தாள்
    அவளது கோபம் நியாயமானது!

    “உன் கணவனின் சாவுக்கு
    காரணம் யார்?”
    “பாண்டியன்”
    சுருக்கமாய் சுடுவதாய்ப் பதில்

    “அவனுக்கு என் நீதிமன்றத்தில்
    தூக்கு”
    அதற்குள்
    நீயே முந்திக் கொண்டாயே?
    அவன் மனைவியும் சேர்த்து”

    வியப்போடு நின்றாள்
    அடுத்த கேள்வியை வைத்தேன்
    “இன்னும் யாரைக் குற்றம் சாட்டுகிறாய்?”
    “பொய்யுரைத்த பொற்கொல்லன்”
    குமுறும் எரிமலையாய் அவள்

    “அவனை ஏன் விட்டு வைத்தாய்?”
    “விதி அவனைப் பதம் பார்த்தது”!
    மௌனமாய் நின்றாள்
    “மன்னனும் பொற்கொல்லனும்
    குற்றவாளிகள் என்றால்,
    மதுரையை ஏன் எரித்தாய்?”

    அவளிடமிருந்து
    பதிலுக்கு ஆவலாய் நான்.
    இப்பொழுது
    மௌனம் தலைவிறிகோலமாய்

    “எவ்வளவு நாசம் செய்தாய்?
    ஒரு பாவமும் செய்யாத மக்கள்
    வீடு வாசலை இழந்து
    நடுத்தெருவில்
    நீ கொக்கரிக்கிறாய்!”

    குற்றவுணர்வில்
    மௌனம் காத்தாள்

    “பொது உடைமைகளை
    அழித்துத் தொலைத்தாய்?
    யார் அப்பன் வீட்டு காசு?”
    கேள்விக் கணைகளைத் தொடுத்தேன்
    தகர்ந்து போனாள்

    “நீ குற்றவாளி
    என் நீதிமன்றம்
    உன்னைக் குற்றம் சாட்டுகிறது”
    வாயடைத்து நின்றாள்

    “உன்னைத் தூக்கிலிட
    உத்தரவிடுகின்றேன்” என்றேன்

    பலத்த ஓசையோடு
    சிரிக்கத் தொடங்கினாள்
    சிரித்துக் கொண்டே நின்றாள்
    இடைவிடாது நீண்ட நேரமாய்
    எல்லாமே இடிந்து விழுவது போல

    மெல்ல மெல்ல
    தேயத் தொடங்கியது
    அந்தச் சிரிப்பொலி

    மீண்டும் மெல்லியதாய்
    இளையோடியது
    ஒரு பனிமூட்டம்
    அவள் உருவம்
    கொஞ்சம் கொஞ்சமாய் அருவமானது

    திடுக்கிட்டு விழித்தேன்
    என் எதிரில் கண்ணகி இல்லை
    அவளது ஒற்றைக் காற்சிலம்பு
    இப்பொழுது என் கையில்.

    ReplyDelete
  13. ஆன்மீக வியாபாரிகள்





    இடிந்து விழும்
    சுவரொட்டிகள்

    பத்திரிக்கைகளில்
    பக்கம் பக்கமாய்
    விளம்பரங்கள்

    மூலை முடுக்கெல்லாம்
    குவிந்து கிடக்கும்
    துண்டு அறிக்கைகள்

    வானொலி அலைவரிசைகளை
    அக்கிரமித்துக் கொண்டு
    நொடிக்கு ஒரு
    பேருரை

    பெரிய மண்டபங்களில்
    வண்ண வண்ண விளக்குகளில்
    சுவடிப்பு
    காற்று மண்டலத்தைக் கிழிக்கும்
    ஒலிபெருக்கிகள்

    குறுக்கு வழியைக்
    கண்முன்னே நிறுத்துகிறார்கள்
    சரியை,கிரியை, யோகம் எதற்கு
    நேராக சில மணித்துளிகளில்
    ஞானம்

    அருட்பெருஞ்சோதி
    வள்ளலாரும்
    திருமந்திர மூர்த்தியும்
    கலங்கிப் போய்விடுவார்கள்

    நிரம்பி வழியும்
    மண்டபத்திற்குள்
    கண்களை மூடியவாறு
    ஆயிரக்கணக்கான பக்தர்கள்

    கத்தை கத்தையாக
    நோட்டுகளை எண்ணியவாறு
    குரு
    குளிர்பதன அறையில்.

    ReplyDelete
  14. ஞானத் தேடல்



    ஒரு நாள்
    எனக்குள் ஒரு ஞானோதயம்
    நானும் புத்தனாய்
    ஆனால் போதிமரமில்லை

    நானே வியந்துபோனேன்
    எப்படி இப்படி?

    புத்தகக் குவியலுக்குள்
    முகம் புதைத்துக் கொண்டு
    கொஞ்ச காலமாய்
    என்னைத் தொலைத்துக் கொண்டேன்

    என் வேள்விகளுக்குப்
    பொருட்கள் கிட்டாததால்
    புத்தகங்களை வெறுத்து
    இருள் சூழ்வதற்குள்
    வெளிநடப்புச் செய்தேன்

    அனுபவங்களை உள்வாங்கிக் கொண்டு
    சேகரிக்கலாமென்று
    தட்டுப்பட்டவர்களையும்
    ஞாபகப் பெட்டகத்திற்குள்
    நுழைந்து வலம் வந்தவர்களையும்
    தேடிப் பிடித்தேன்

    ஏதோ ஆறுதலுக்குக்
    கொஞ்சமாய்க் கொட்டி முடித்தார்கள்
    சூன்யமாய் எனக்குள்
    இன்னும் திருப்தியில்லை
    மீண்டும் மீண்டும்
    அதே கேள்விகள்
    முட்களாய்ப் பதம் பார்த்தன

    நான் உண்மையில் எது?
    எங்கிருந்து வந்தது?
    எங்கே போகப் போகிறது?
    இதற்கு ஜனனமும் மரணமும்
    யாருடைய முன்மொழிவு?

    வேறு வழியில்லாமல்
    கடவுளுக்கு ஒரு கடிதம் போடலாமென்று
    கசங்கிய காகிதமொன்றை
    மெதுவாய் நிமிர்த்தி
    முகவரியினை எழுதத் தொடங்கினேன்

    அப்பொழுது
    யாரோ அறிமுகமில்லாதவன் ஒருவன்
    என் தோள்களை
    உலுக்குவதைக் கண்டு
    மிரண்டு திரும்பினேன்

    என் அனுமதிக்குக்
    காத்திராமலேயே
    என் கரங்களைப் பற்றி இழுத்தவாறு

    ஓர் இருட்டுக்குள் நுழைந்தான்
    எல்லாமே இருட்டாய்...


    ReplyDelete
  15. விழலுக்கு...





    ஒவ்வொரு இரவும்
    எங்களுக்கு வாடிக்கையானது

    காப்பிக் கடைகளில்
    எங்கள் அவசரக் கூட்டங்கள்
    எண்ணற்ற கருப்பொருள்களில்
    நாங்களே உருமாறியிருந்தோம்

    சமுதாயத்தின் அவலங்களையும்
    இயலாமையையும்
    மூட்டை மூட்டையாய்
    அவிழ்த்துப் பார்ப்போம்

    எங்கள் கழுகுப் பார்வையில்
    எதுவுமே தப்பியதில்லை
    பக்கத்து வீட்டுக்காரனின் சிக்கல் முதல்
    பாராளுமன்ற சிக்கல்வரை
    எல்லாமே விரல் நுனியில்

    மணிக்கணக்காய் அலசுவோம்
    வேர் முதல் நுனி வரை
    சொற்போரும் பட்டிமன்றமும்
    எங்கள் வாதத் திறமையைக் கண்டு
    வாயடைத்து நிற்கும்

    எங்கள் வட்டத்தைச் சுற்றி
    ஒரு பெரிய வட்டம்
    ஆவலோடும் வியப்போடும்
    அவ்வப்போது வெளியிலிருந்தும்
    ஆதரவுக் குரல் வந்துசேரும்

    ஒவ்வொரு நாளும்
    நடுசாமம் வரை
    வழக்காடு மன்றம் நீளும்
    நாங்கள் சலைத்தவர்களல்ல
    விட்டுக் கொடுப்பதற்கு

    மூச்சின் இறுதிச் சொட்டுவரை
    ஏவுகணைகளாய்
    வாதத் தொகுப்புகளை
    பாய்ச்சிக் கொண்டே இருப்போம்

    கடையடைப்பு செய்யும்போது
    வேண்டா வெறுப்போடு
    எழுந்து சோம்பல் முறித்து
    பழைய மோட்டார்சைக்கிள்களை
    எரிச்சலோடு முடுக்குவோம்

    நம்பிக்கையிருக்கிறது
    நாளை மாலையும்
    இந்தச் சபை மீண்டும் கூடும்
    தீர்க்கப்படாத வழக்குகள்
    இன்னும் குவிந்து கிடக்கின்றன கிடப்பில்.


    ReplyDelete
  16. அடுத்தவனைப் பார்த்தாவது...




    அவனும்
    வந்தவர்களின் பட்டியலில்
    வந்தேறிகள் என்ற வரலாற்று முகத்தோடு

    எல்லாவற்றையும் மறந்தவனாய்
    சேமிப்புப் பெட்டகத்தில்
    கத்தைக் கத்தையாக
    சேமித்தவற்றையெல்லாம் எண்ணியவாறு

    இயலாமை போர்க்களத்தில்
    அவன் புளுதித் தட்டி
    நெடுநாட்களாகி விட்டது

    இப்பொழுதெல்லாம்
    சிகரங்களின் கலசங்களுக்கு
    முலாம் பூசிக்கொண்டிருக்கின்றான்

    இன்றைய நாட்கள்
    அவனுக்குள் கனவுப் பதிவுகளைக்
    காட்டுவதில்லை
    அடுத்தத் தலைமுறையின்
    வரலாற்றுக் குறிப்புகளை
    பதியம் செய்தவாறே
    புயலாய் நகர்ந்து கொண்டிருக்கிறான்

    அவனது சொத்துடைமை
    வரவுக் கணக்கின் பைகளில்
    நிரம்பி வழிந்தவாறு

    விதியைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி
    அவன் குறுக்கு விசாரணைகளை
    நிகழ்த்துவது கிடையாது
    நிரந்திர சாட்சியாய் மதிமட்டுமே

    அவன் பள்ளிகளும்
    வாணிப மையங்களும்
    குடியிருக்கும் வீடுகளும்
    வானாந்திர கட்டடங்களாக

    அது வேற்றுமைகளை
    அடையாளம் காணாத
    ஓர் உலகம்

    அங்கு உழைப்பு மட்டுமே
    முன்மொழியப்பட்டு
    ஏகமனதாய்த் தேர்வு செய்யப்பட்டு
    கரங்களெல்லாம் தானம் செய்யப்பட்டு
    நகர்ந்து கொண்டிருக்கும் பூமி

    நின்று மூச்சி விடுவதற்கு நேரமில்லை
    மணிக்கணக்காய் வாய்கிழிய பேசுவதற்கு
    இடமில்லை

    அவசர அவசரமாய்ப்
    போய்க் கொண்டிருக்கிறார்கள்
    பொழுது சாய்ந்த பிறகும்
    இருட்டைக் கிழிக்கும்
    விளக்குகளின் வெளிச்சத்திலும்
    இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்

    நாளைய நாட்கள்
    அவர்களுக்கு நம்பகமாய்
    நாமும் அதே வரலாற்று முகத்தோடு

    எங்கே போகிறோம்
    அவனைப் பார்த்தாவது.....

    ReplyDelete
  17. புத்தகங்களும் பேசும்





    மனம் விட்டுப் பேசுவதற்கு
    ஆள் இல்லையேயென்று
    பொருமிக் கொண்டிருக்காதே

    புத்தகங்களும் பேசும்
    கொஞ்சம் மனம் விட்டுப் பேசிப்பார்
    உனது தனிமை தாகத்திற்கு
    தொண்டைக் குழாய்களை
    ஈரமாக்கும் பானமாய்

    மழுங்கிய உனது அறிவு வாளைச்
    சாணைப் பிடித்து
    கூர்மையாக்கும்
    களங்கள் உன்னைக் கண்டு
    வெறிக்கும்

    உன்னைச் சூழ்ந்து
    சுட்டெரிக்கும்
    கவலை யூகத்தைத்
    தகர்த்தெறியும்

    பொழுதெல்லாம்
    பேசிக் கொண்டிரு புத்தகங்களோடு
    உன்னைச் சுற்றி தெரியும்
    ஒளிவட்டத்தில்
    பூக்கள் மலரும்

    அறிவு உலகம்
    சிவப்புக் கம்பளம் விரித்து
    உன்னை வரவேற்கும்

    உனது உலகத்தில்
    எல்லாமே வெளிச்சமாய்
    இருள் மருண்டுபோயிருக்கும்

    பழுதுபடாத உனது அடிகளின்
    பவ்வியமான பயணத்தில்
    பாதாளங்கள்கூட திறக்கும்

    உனது அறிவு மழையில்
    நனைவதற்கு
    உலகமே அணிவகுத்து நிற்கும்

    உனது அறிவுப் பெட்டகம்
    காலியாகி நெடுங்காலமாகிவிட்டது

    வெறுமையான உன்னிடம்
    கொடுப்பதற்கு ஒன்றுமேயில்லை
    கேட்பதற்கும் நாதியில்லை

    உனது முகமும் ஒளியிழந்து
    அமாவாசை இருளாய்
    ஒவ்வொருவராய் மிரட்டிப்பார்க்கிறது

    காலச் சக்கரம்
    அசுர வேகத்தில் சுழன்றவாறு
    நெருங்கிவரும் முதுமை

    மீந்திருக்கும்
    சொற்ப நாட்களாவது
    வாழ்ந்த பயன் சொல்லட்டும்

    பேசு
    உன் தனிமைகளின்
    மணிச்சொட்டுகளில்
    புத்தகங்களோடு பேசு.

    ReplyDelete
  18. நானும் என் கனவுகளும்




    அரை நூற்றாண்டைத்
    தொட்டுப் பார்க்கும் வயது

    அனுபவம்
    வயதை முந்திக் கொண்டு
    ஒரு அசுர பிரயாணம்

    வார்த்தைகளால்
    சொல்லி முடிக்காத
    வேதனை வரிகள்
    மனமுகடுகளை உரசியவாறு

    கற்களும் முட்களுமாய்
    அலங்கரிக்கப்பட்ட பாதைகள்
    பாதங்களைப் பதம் பார்த்து
    சூடுபோட்ட அனுபவங்கள்

    ஒன்று
    எனக்குள் எழுந்த
    பிரளயம்
    இன்னொன்று
    வழிப்போக்கனாய்
    இந்த சமுதாய தெருக்களில்
    உலா வந்தபோது
    என்னைப் பிண்ணிய
    வளையம்

    இளைப்பாறும்
    ஒரு முச்சந்தியில்
    எல்லாவற்றையும்
    முடிச்சவிழ்த்துக் கொட்டுகிறேன்

    அலசல்களில்
    சில தேடல்களில்
    நெருடல்களில்
    தீக்குச்சியாய் உரசிப் பார்க்கும்
    எண்ண அலைகள்

    மனத்திரையில்
    நூலாம்படையாய்
    ஒட்டிக் கொண்டு
    பசபசக்கும் உணர்வுகள்

    பகிர்வுகளுக்காக
    எழுதலாமென்று
    என் தூவலைத் தூக்கி
    நிறுத்துகிறேன்

    அது ஒரு நீண்ட
    பிரயாணம்
    மாறுபட்ட பரிணாமம்
    மனம்
    எழுத்துக் கூட்டி
    வாசித்துக் கொண்டிருப்பதை
    தூவல்
    மொழிப்பெயர்க்கிறது

    தோழர்களே வாருங்கள்
    அடுத்த தேசத்தை நோக்கி
    நமது பயணம்
    விரியட்டும்

    தோள்களைக் கடுக்கும்
    எனது
    சுமை முடிச்சுகளை
    நீங்கள் அவிழ்க்கும்போது

    நாம்
    ஒன்றாகிப் போயிருக்கலாம்
    உணர்வுக் குட்டைகளில்
    ஒன்றாக ஊறிய மட்டைகள்தானே
    நாம்.

    ReplyDelete
  19. 888 Casino & Hotel - Dr. Maryland
    2018 · The brand-new 888 Casino & 당진 출장안마 Hotel 용인 출장샵 at Mount 남원 출장샵 Airy offers a new adventure when you 하남 출장안마 take a spin 안성 출장마사지 at the casino. The slot machine features five reels

    ReplyDelete