Tuesday, 29 March 2011

நேசத்திற்குரிய என் கவிஞன் வைரமுத்துவிற்கு

கவிப்பேரரசே
கறைபட்ட
உன் வரிகளை
நான்
எப்படிச் சுவாசிப்பது?

உன்னை
அடிக்கடி
என் மனச் சிலுவையில்
ஏற்றி
அறைய நேரிடுகிறது

தேனாடைகளாய்
உலா வரும்
உன் நூல்களைபோல
உன்
திரை வரிகள் இல்லையே?

அவை
பாடைகளை அல்லவா
காது மடல்களில்
தூக்கியெறிந்து
மனதை
மயானமாக்கிறது.?

மூச்செல்லாம்
தமிழென்கிறாய்
உன் பேச்சு
இனிக்கிறது
ஈரடி குறலாய்...

உனது
விரச வரிகளை
உரசும்போது
உறைந்துபோகிறோம்

குரல்வளை
நெறிக்கப்படுகிறது
மூச்சுக் காற்றில்
தீச்சுவாலைகள்

கவிஞனே
உன்
போலி பிம்பத்தைக்
கண்டு
நிழல் கண்ணாடியைக்
கட்டித் த்ழுவும்
குருடனல்ல
நான்

சில்லரைகளுக்காகத்
தன்மானச்
சிறகுகளை
முறிக்கிறாயே?

உனது
நொண்டிச் சிந்து
என்னை
நகைக்க வைக்கிறது

எனது
இளசுகள்
எழவேண்டுமென்று
முரசு
கொட்டுகிறேன்

ஆனால்
சலவை செய்யா
உனது
விரச வரிகளில்
வழுக்கி விழுந்து
பூப்பெய்துவதற்குள்
வாலிபத்தை
வாசிக்கத் தொடங்கிவிட்டார்கள்

காதலைத்
தசை வசப்பட்டதாய்
அர்த்தப்படுத்திக் கொண்டு
பதின்மங்களில்
பித்துப்பிடித்துப்
பேய்களாய்த்
தெருக்களில்

விழிப்படலங்களில்
தீப்பந்தத்தை
வைத்தாற்போல
வழியெங்கும்
விரசங்கள்

காமத்தின்
உச்சத்தில்
குப்பை மேடுகளிலும்
கழிவறைகளிலும்
சிசுக்கள்
கொசுக்களாய்..

வேதனை
வேள்வியில்
மனம்
கொளுந்துவிட்டு
எரியும்போது...

தடா சட்டத்திற்கும்
டிமிக்கிக்
கொடுத்துவிட்டு
அலைவரிசைகளில்
காற்றோடு காற்றாய்
கொச்சைவரிகள்

உன்வரிகள்
கணினியின்
விடக்கிருமியைவிட
மூர்க்கமானது

மூன்று
வயது
குழந்தைக்கும்
உனது வரிகள்
திருமுலைப் பாலாய்

போதையில்
போத்தல்
நுனிமேல்
நடைபயிலும்
குடிகாரனுக்கும்

உன்
பாடல் வரிகள்
பல்லவியாய்

கவிஞனே
சமுதாயத்தின்
தன்மான ஆடையின்
கைத்தறி
உன் கையில்

நாளைய்
கொடிகளின்
கொம்பு
உன் தோள்களில்

நீ
நாளைய
நம்பிக்கை
நாட்களின்
நாட்காட்டி

அதனால்
உன் வரிகளை
முழுமையாய்
வெளுத்து
ஒரு உச்சிப்பொழுதில்
சலவை செய்!

இயக்கத்தை
முடுக்கிவிடு
என்
இனமானப் போர்க்களத்தில்
நீதான் தளபதி......!

அஃறிணையாய்......

நேசத்திற்குரிய
கோழையே!

உன்னால்
என் பேனா
மீண்டும்
உயிர்த்தெழுகிறது

கார்காலத்தில்
ஒரு நாள்
வியர்த்துக் கொட்டிய
ஓர் இரவில்
உன் நனவு
என் உறக்கத்தைக்
களைத்துப் போட்டது.

நீயும்
உன்னைப் போன்றோரும்
அடிக்கடி
உசுப்பி விடுகிறீர்கள்
எங்கள் தலைவர்களை

அதனால்
எப்பொழுதும்
ஐந்தாண்டுகளுக்கு
ஒரு முறை
அறிக்கை விடுபவர்கள்
இப்பொழுது
அடிக்கடி விடுகிறார்கள்
உன் மரணத்தில்

உன்னை
வார்த்தைத் தோட்டாக்களில்
துளை போடுவதற்குள்
கொஞ்சமாய்ப்
பாராட்டுகிறேன்

இந்த
அசட்டுத் தைரியம்
எமனுக்குக் கூட
வராது

எதிர்ப்பார்ப்புகள்
கடலாய்க்
கம்பளம் விரிக்க
எப்படி
இந்த
ஒற்றையடிப் பாதையில்
சிந்து பாடுகிறாய்?

கிடைக்கவில்லையென்றால்
எடுத்துக் கொள்கிறாயே
உயிரைத்
தற்கொலையென்ற
உடன்படிக்கையில்

அப்படியென்றால்
நீ
கருவிலேயே
விலகியிருக்க வேண்டும்
மற்ற
சகோதர் அணுக்களுக்கு
வழிவிட்டு

அறுபதுகளில்
அறுத்துப்போட வேண்டிய
ஆசை விழிதுகளை
இருபதுகளிலேயே
அறுத்து விட்டாயே?

தன்னம்பிக்கை
ஆயுதங்களை இழந்து
போர்க்கள முச்சந்தியில்
நீ மட்டும்
நிராயுதபாணியாய்.....

நிம்மதியாய்
நீ மட்டும்
பாடையில்
தாயும் தந்தையும்
உடன் பிறப்புகளும்
உடன்கட்டையில்...

கோழையே?
கொலை வெறியனே?
எதற்கு
ஆர்ப்பரிக்கிறாய்
சுனாமியாய்

வழுக்கிவிழும்
சூரியனும்
அவிந்துபோகும்
நட்சத்திரமும்
தேய்ந்துபோகும்
நிலவும்கூட

மீண்டும் மீண்டும்
உதிர்ந்த மலராய்
உயித்தெழும்போது

அஃறிணையும்
உயர்திணையாய்.........

நீ மட்டும்
அஃறிணையாய்.!

Friday, 25 March 2011

சின்னச் சின்ன வரிகளில்

ஞானம்

இன்னும்
எத்தனை
மர நிழல்களைத்தான்
நாடுவது?

புத்தனுக்குக்
கிடைத்தது
எனக்கும்
கிடைக்குமென்று!


காந்தியம்

ஓரிரவாது
காந்தியின் கல்லறையில்
படுத்துறங்க
வேண்டும்?

நூறுமுறையாவது
பாட வேண்டும்
ரகுபதி ராகவ ராஜாராமென்று

அவர்
எழுந்தால்
ஒருமுறையாவது
துணிந்து
கேட்டுவிட வேண்டும்

பொறுமை
என்ன விலையென்று!

கரும்பு

பட்டினத்தார்
நனவலைகளை
மோதினார்

அடியையும்
நுனியையும்
மாற்றி மாற்றி

கடித்தும்
மென்றும்
துப்பினேன்

இனிப்பு
வரிந்து கட்டிக்கொண்டு
சுவையாய்
எழுந்தது

வாழ்க்கையின்
முதலையும்
முடிவையும்

அளந்து பார்த்து
அங்கலாய்த்தது
மனசு

மெல்ல
வாய் திறந்தது.....

எல்லாமே
சக்கையென்று!

பிச்சை

காற்சட்டையில்
எல்லாப் பைகளையும்
கையை விட்டுத்
துலாவினேன்

நெடு நேரமாய்த்
துருவித் துருவித்
தேடியதில்

கையில்
தட்டுப்பட்டது
பத்து சென் நாணயம்

நாணத்தோடு
விலகினான்
வழியில்
பிச்சைக்காரன்.


தன்முனைப்பு

விழுவது
எழுவதற்காகத்தான்

கரவொலி
விண்ணைப் பிளந்தது

கரைந்தது
சில நூறு நோட்டுகள்


அமைதி

கிள்ளிப் பார்த்தேன்
இம்மி அளவும்
நகரவில்லை

கத்தினேன்
காது மடல்களுக்குக்கூட
எட்டவில்லை

மிதித்தும் பார்த்தேன்
மசியவில்லை

அறுத்தெறிவதற்குக்
கத்தியோடு
வந்தேன்

அமைதியின்
நிசப்தத்தில்
ஓரு மூலையில்

மனமுண்டம்!


ஆவல்

என்றாவது
எப்படியாவது
தெரிந்து கொள்ள
வேண்டும்

ஆசை
பேருருக் கொண்டது

இன்று
கண்டிப்பாய்க்
கண்டு பிடிக்க
வேண்டும்

கடலோரத்தில்
கந்தலாய்
மனசு

மெல்லினமாய்
வரும்
அலையிடம்
கேட்டது

கடல்
என்ன பேசியது?

முறைத்த அலை
சுற்றும் முற்றும்
வெறித்துப் பார்த்து

முகத்தில்
உமிழ்ந்த வண்ணமாய்
நகர்ந்தது!

வரலாறு

ஆடம்பர
சுவடிப்புகள்
அதிர்ந்தது மேடை

தலைவர்களின்
அதட்டல் வரிகளுக்குப்
பலத்த கைத்தட்டல்

மாலையும்
பொன்னாடையுமாய்க்
கடைவிரிப்பு

வறட்டுப்
புன்னகையோடு
தலைவர்களின்
புறப்படு படலம்

தொண்டர்களின்
முழக்கம்
விண்ணைப் பிழந்தது

அன்றும்
இன்றும்
இனி என்றும்......

மாறாத
வரலாற்றுக் கோலங்கள்

வெளியில்
பாத மலர்களைத்
தெளிக்கும்
பள்ளி
சிறுசுகள்


நட்டம்

ஆற்றில்
கொட்டியவனை
நிறுத்தினேன்

கலங்கிய நீரால்
கலங்கும்
மானுடத்தை
நினைத்து

அளந்து கொட்டு
என்றேன்
உணர்வோடு

கொட்டியவன்
தலையில்
குட்டாதக் குறையாய்

நமக்கு
எங்குக் கொட்டினாலும்
நட்டம் தானே?
என்று

நெடியோடு
நகர்ந்தான்.

சுமை

கிளை
சுமையைக்
கொள்ளுமா என்று

மலர்
உதிர்ந்தது

புதிய மொட்டுக்கு
வழிவிட்டு!


கீதாஞ்சலி

ஒரு
மழைக்காலம்

சாலையோர
தவளைகளின்
கீதாஞ்சலி

சாலையக்
கடக்கும்
அறப்போராட்டத்தில்

நசுங்கிய
தவளைகளுக்கு!


வெளிச்சம்

இராமர்
ஆண்டாலும்
இராவணன்
ஆண்டாலும்

நமக்கு
விடிவில்லை
என்றது
பெருசு

படித்த மமதையில்
நான்
சாதித்தேன்
இல்லையென்று

முடிவில்
ஆமாம் என்பதே
வெளிச்சமானது!


வேண்டுதல்

கலைந்து போன
மேக மூட்டங்கள்
ஏக்கத்தோடு தவளைகள்!

இன்பம்

புல்லாங்குழல்
இனிமையாய் இசைத்தது
குழந்தையின் அழுகை!

துடிப்பு

நாடித் துடிப்பு
நினைவுக்கு வந்தது
கையில் கடிகாரம்!

இயற்கை

நீளமான ஏடு
ஆயிரமாய்க் கவிதைகள்
நட்சத்திரங்கள்!


நிலவு

சட்டிக்குள்
பொறித்த அப்பளமாய்
வானில் நிலவு!


கவலை

நாற்றுகளின் நடுவில்
புல்லுருவிகளாய்
மனதிற்குள் கவலைகள்!


தேடல்கள்

மர நிழல்களில்
தொடர்கதையாய்த் தேடல்கள்
கண்முன்னே புத்தன்!


மகாத்மா

ஓரிரு அறைகளோடு
கன்னம் பழுத்தது
நினைவில் மகாத்மா!


ஹைக்கூ

முகம் சுளிக்காத
பௌர்ணமி நிலவு
ஏடுகளில் ஹைக்கூ!




தேடல்கள்

Thursday, 24 March 2011

எழுத வேண்டும்

எழ்த வேண்டும்!
எழுந்த
எண்ண அலைகளின்
ஆர்ப்பரிப்பு

குடங் குடமாய்க்
கவலைகளைச்
சுமந்து வந்து
குறைகளுக்குச்
சாயம் பூசாது....

எழுத வேண்டும்
என்னுள்
எதார்த்தமாய்
எட்டிப் பார்க்கும்
எதிர்பார்ப்புகளை

சதா
அவலங்களை
அலசிப் பார்த்து
அலுத்துப் போனது
அவிந்த மனசு

மனச் சுவரில்
விரிசல்
விட்டிருந்தது
பாழாய்ப் போன
பழைய பல்லவி

நிரூபிக்கப்படாத
பழியோடு
குற்றவாளிக் கூண்டில்
ஆயுள் கைதியாய்
என் நிழல்

மனித வெடிகுண்டாய்
மன சாட்சிகள்
சாட்சிகளையும்
காட்சிகளையும்
தகர்த்தெறிந்த
வண்ணமாய்

மனக்காட்டுக்குள்
தீயை வைத்து
புகைச்சலின்
படையெடுப்பில்
தவித்துக் கொண்டிருக்கிறேன்

விழிப்படலங்களில்
எரிமலையாய்த்
தீக்குழம்புகள்

எழுத வேண்டும்
உதிர்ந்துபோன
இரப்பர் மரங்களை
நிர்வாணமாய்ப் போன
காடுகளை

கற்பனக் காற்று
கடக்கும்போது
காதோரம்
மௌனமாய்ப்
பற்றவைக்கிறது

விழி முட்டி
ஒதுங்கிய
பனித்துளி
உலையாய்
உசுப்பிப் பார்க்கிறது
உடலை

எழுத வேண்டும்
மனக்கரைகளை
மோதும்
ஆசை அலைகளாய்
தேடல்களைத்
திரும்பிப் பார்க்கிறேன்

பழுதுபடாத
பாதைகளில்
காயத்தால் கழுவிய
பாதங்களின்
சுவடுகள்

எழுத வேண்டும்
மன அலைகளின்
ஆர்ப்பரிப்பு.......

தமிழீழக் கவிதைகள்

மேகங்கள்

எங்கேயோ
தூறல் போட்டுவிட்டு
எங்கள்
காய்ந்த மண்ணைக்
கடக்கும்
உலர்ந்த மேகங்கள்
எங்கள்
எதிர்ப்பார்ப்புகளைப்
போலவே.
****************
சுதந்திரம்

சுதந்திரத்தைப்
பற்றிய கனவு
எங்கள்
உறக்கங்களில் கூட
வருவதில்லை
ஏனென்றால்
நாங்கள்
உறங்கியே
பல ஆண்டுகளாகிறது.
****************
வெளிச்சம்
தந்தையின்
கல்லறையில் பையன்
சின்னதாய்
கண் சிமிட்டும்
விளக்கு
கண்களில்
வெளிச்சப் படலம்.
****************
வளைக்காப்பு
மூத்தப் பெண்ணுக்கு
வளைக்காப்பு
வளையல்களில்லை
சில் தோட்டாக்களும்
ஒரு துப்பாக்கியும்.
****************
கீறல்கள்
அவர்கள்
காயங்களைக்
கீறிப்பார்க்கிறார்கள்
வாழ்வின்
அவலங்கள்
எட்டிப் பார்க்கின்றன
மற்றவர்களோ
அவர்களின்
சாயங்களைக்
கீறிப்பார்க்கிறார்கள்
வாழ்வின்
வெறுமைகள்
வெறித்துப் பார்க்கின்றன.
**********************
மரம்
ஒரு முறையாவது
இங்கே
கால் பதித்துப்பார்
உன்னுள்
இருக்கின்ற
வீர விருட்சங்கள்
ஒரே நாளில்
மரங்களாகும்.
********************
படைகள்
அவர்கள்
ஆயுதங்களச்
சுமந்து கொண்டு
படைகளாக.......
நாங்கள்
உடைமைகளைச்
சுமந்து கொண்டு
கால்நடைகளாக....
********************
இரத்த தானம்
ஒரு
சாயுங்காலத்தில்
சலவை செய்த
அடி வானத்திற்கு
எங்கள்
வீரர்களின்
இரத்த தானம்...
*******************
யாசிப்பவன்
யோசித்துப் பார்க்கிறேன்
யாசிப்பவர்களின்
சாசனங்களைப்
படையலிடுவதற்கு
அதனால்
தமிழிடம்
நானும்
யாசிக்கின்றேன்
அவலங்களை
அடையாளம் காட்டும்
அமுத சொற்களுக்கு...
***********************
குவியல்
எத்தனை
யுகங்களாய்
சுதந்திர வேள்வியை
வளர்க்கின்றோம்
இன்னும்
அணையாமல்
வேள்விப் பொருள்களின்
குவியல்!
மனித உடல்கள்.
**********************
பண்பாடு
நமக்கு
மட்டும்தான்
பண்பாடும்
நாகரிகமும்
அதனால்தான்
நம்மைச் சுற்றி
நாடோடிகளின்
நாச வேலைகள்
************************
ருசித்தவர்கள்
எங்களது
தேயிலையை
ருசித்தவர்களுக்கு
எங்கள்
உரிமைக் குரலை
ரசிக்கத் தெரியவில்லை.
***********************
பிரசவம்
இருள் வானத்தின்
நிசப்தத்தை
கிழித்தெறிந்தது
பிரசவித்த
பச்சிளம் குழந்தை!
கால் வயிற்றுப்
பாலுக்காக அல்ல!
காலங் காலமாய்
பசித்திருக்கும்
வர்க்கத்திற்காக!
**********************
நிழல்
கதறுகிறாள்
கணவனை
இழந்த தாய்!
கண்ணீர்
துடைத்தப்
பிஞ்சுக் கரங்களின்
மெல்லிய குரல்!
அழாதே
நான் இருக்கிறேன்.
*********************
கடந்தது
நாங்கள்
ஏடுகளைக்
கடந்ததை விட
காடுகளைக்
கடந்ததுதான்
அதிகம்.
*********************
தீக்குச்சி
தீப்பெட்டிக்குள்
தீக்குச்சிகள்
கூர் வாளுடன்
சின்னக் குழந்தை.
**********************
விடிவதற்குள்
பதியே
விடிவதற்குள்
வந்துவிடு
பையனுக்குத்
துப்பாக்கி வேண்டுமாம்.
**********************
நிதானம்
தெருமுனையில்
விடைபெறும்போது
பையனின்
அழுகுரல்
சற்று நிதானித்த
தந்தையின் குரல்
"நீ
நாளை போகலாம்"
*********************
தலையெழுத்து
நிகழ்கால
கல்லறைகளில்
எதிர்காலத்தின்
தலையெழுத்து.
********************
கொடி
கண்ணா!
பாஞ்சாலிக்கு
ஒரு சேலை
கொடுத்தாயே!
அதில்
கொஞ்சமாவது
எங்களுக்கும்
கிழித்துக் கொடு!
எங்கள்
கொடிக்கம்பமும்
நிர்வணமாய்!
********************

நானும் சமகாலமும்

வாழ்க்கை

ஒரு
அமுத சுரபி
என் கைகளில்

நாடோறும்
நிறைவாகவே சுரக்கிறது

ஒவ்வொரு
பொழுதும்
குறைவில்லாமல்
வழிகிறது

இன்பமும்
துன்பமும்
******************
மானுடம்

கோடரியின்
அசுரக் கரங்கள்

பதறாமல்
மரம்
மௌனமாய்ப் பேசியது

காது மடல்களை
உரசிய இரகசியம்

"மனிதா
உன்னை நேசிக்கின்றேன்"
*******************
விடைபெறுதல்

விடிவெள்ளி
அடிவானில்

நிலவு
காத்திருந்தது
கதிரவனின்
வரவிற்கு

நன்றி
சொல்லி
விடைபெறுவதற்கு.
****************
வாழ்க்கை

விடியல்
ஒரு கனவு

நாம்
உணர்வுகளோடு
ஒன்றிப்போனோம்

பலிக்கும்
என்றார்கள்
விடியல் கனவு

விழித்துப்
பார்த்தேன்

நாம் இன்னும்
அந்நியர்களாய்
பல நிறங்களில்...
***************
கடந்தவை

சன்னலோரம்
ஒரு சாயுங்காலம்
வெறித்திருந்தேன்

வழிப்போக்கனாய்
கடந்துபோன
அனுபவங்கள்

ஒரு கணம்
நின்றது
வேடிக்கையாய்ச்
சிரித்தது

கடந்துபோனது
சில மணித்துளிகளில்...
************************
ஆசை முகம்

கால்கள்
நிலைக்குத்தின
குளக்கரையோரம்

நிலவின்
பிம்பம்
கண்ணாடியாய்

தீண்டும்
தென்றலின்
மெல்லலைகள்

அலைக்கழிக்கிறது
அவளது
ஆசை முகம்.
********************
நிழல்

நான் யார்?

என்னுள்
வேள்வியாய்
வினாக்களின்
படையெடுப்பு

நிழல்
அமைதியாய்ச்
சிரித்தது.
*****************
விபத்து

நமது
சந்திப்பு
ஒரு விபத்து

எதார்த்தமாய்
நீ
அள்ளி வீசிய
புன்னகை

முகமனுக்காக
உதிர்ந்த
ஓரிரு சொற்கள்

இன்னும்
காத்திருக்கிறேன்

காயப்பட்ட
இதயத்தோடு...

******************
ஞான ஒளி

இருள்
தவம் களையும்போது

ஒளி
மௌனமாய்
நுழைகிறது

சில
உண்மைகளைத்
தோளோடு
சுமந்து கொண்டு.

Wednesday, 2 March 2011

வலைத்தளத்தில் முதல் நாள்



இன்று முதல் என் வலைத்தளத்தில்
படைப்புகள் வலம் வருகின்றன!
நண்பர்களே வாருங்கள்!
கவிதையோடு பேசுவோம்