உன் ஞாபக மழையில்
காதல் புதுக்கவிதைத் தொடர்
கோவி.மணிமாறன், நீலாய்
நுழைவாசலில்,
காதல்
ஒரு மூன்றெழுத்து மந்திரம். மனித நாகரிகத்தின் தொடக்கம். உலகை இயக்கிக்கொண்டிருக்கின்ற
புவி ஈர்ப்புச் சக்தி. மொழிகளுக்கு அப்பாற்பட்ட வார்த்தைகளால் விவரிக்க முடியாத மெல்லிய
உள்ளுணர்வுகள். ஒரு பருவத்தில் பூத்துக் குலுங்கி மனமூலைகளில் எல்லா பக்கங்களிலும்
சுகந்த மணத்தை வீசிக்கொண்டிருக்கும் சந்தன விருட்சங்கள். அது மௌனமொழி அதனால் மொழிப்பெயர்ப்பதற்கு
சொற்கள் இல்லை. ஏக்கம், தாக்கம், விருப்பம், எதிர்பார்ப்பு, இன்பம், துன்பம், வேதனை,
போராட்டம், தவிப்பு என்று அடுக்கடுக்காய் உணர்வு கலவையை உள்ளுக்குள் கொட்டி ஒரு தனிமை
நாடகத்தை இரகசியமாய் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. அது உலகமொழி. உலகின் மூலை முடுக்குகளில்லெல்லாம்
சுவாசித்துக் கொண்டிருக்கின்ற எல்லா ஜீவராசிகளுக்கும் புரிந்த மொழி. மனம் காதல் வயப்படும்போது
இந்த பூமிப்பந்து ஒரு சோலைவனமாய் மாறும். காதல் காயப்படும்போது அது ஒரு பாலைவனமாய்
தோன்றும்.
காதலின்
மௌனத்தைக் களைத்து, உள்ளுணர்வுகளை கிளரிப்பார்க்கிறேன். என் காதலியாய், என் மனைவியாய்
என் மன நந்தவனத்தில் உலா வரும் ஒரு வெள்ளி நிலவு. நினைவுகள் முழுவதுமாய் அவள் முகம்.
ஒவ்வொரு முறையும் அலைமோதி, கைக்கோர்த்து ஒன்றாய் மழை என்ற கீதத்தை அந்த மழைமேகங்கள்
இசைக்கும்பொழுதெல்லாம், அதில் நனைந்து குளிர்காய்ந்த உணர்வுகளாய் அவள் நினைவுகள்.
- ஞாபக மழை
உன் ஞாபக மழையில்
நனையும்போதெல்லாம்
எனது நனவுக்குடைகள்
விரிகின்றன
உன்
ஞாபக் மழையில் 2.
அவள் இல்லாத இரவு தனிமையாய். இனம்புரியாத தவிப்பு.
நகரும் மணித்துளிகளில் நரகத்தின் வேதனை. அவள் பக்கத்தில் இருக்கும்போது இந்த வாழ்க்கை
இனிக்கிறது. அவளைப் பிரிந்து தனிமையில் வாழும்போது இந்த வாழ்க்கை கசக்கிறது. காதல்
இனிப்பையும் கசப்பையும் காட்டி இந்த வாழ்க்கையை அர்த்தப்படுத்துகிறது. ஒவ்வொரு மணித்துளியும்
தனிமையில் உதிரும்போது சொல்லோனா வேதனைகள் மனதை உரசிப்பார்க்கின்றன. இந்த விளங்காத நோய்க்குக்
காரணம் அவள்தான். அந்த நோய்க்கு மருந்தும் அவள்தான். வள்ளுவன் சொன்ன பாடம் அசைப்போட்டவாறு
அவள் திருமுகத்தை மனக்கண்ணாடியில் பதியம் செய்கின்றேன். எனது உறக்கம் நிம்மதியாய்.
அவள் முகத்தை நுகர்ந்தவாறு விடியலை நோக்கி என் கனவுகள் நகர்கின்றன.
அடிக்கடி
வந்துபோகிறது
உன் புன்னகை முகம்
ஒவ்வொரு இரவின் கனவிலும்
உன் ஞாபக மழையில் 3
இப்பொழுதெல்லாம்
தனிமை எனக்கு அதிகம் பிடித்திருக்கிறது. ஒய்ந்த ஏரிக்கறை, பரபரப்பிற்கு அப்பாற்பட்ட
நிலப்பகுதிகள், சலசலப்பு ஒடுங்கிய அருவிகளும் ஆறுகளும், அலைகள் மட்டும் பேசும் கடற்கரைகள்,
மலர்களும் பறவைகளும் மட்டுமே தனிமையில் பேசிக்கொண்டிருக்கும் பூஞ்சோலைகள், மேககங்களுடன்
தனித்திருக்கும் மலைமுகடுகள் இவற்றையே என் மனம் நாடிச்செல்கிறது. ஆள்நடமாடமில்லாத இடங்களில்
தனிமை வெண்சாமரம் வீசுகிறது. என்னை மறந்தவாறு உன் நினைவுகள். இங்கு வேதனைகள் இல்லை.
அழ்ந்த தியானத்தில் நிறைந்த மனம். உள்ளார்ந்த தேடல்களில் உன் முகம் எட்டிப்பார்க்கிறது.
எனக்குள் ஒரு வெளிச்சம் தனிமையில் நனைந்தவாறு.
தனிமை
தனிமை
என்னை அதிகமாய்
நேசிக்கிறது
உன் நினைவுகளோடு
உன் ஞாபக மழையில் 4.
மனம் அமைதியின் விளிம்பில்.
மெல்ல நகரும் இரவு. மனக்கதவுகளைத் தட்டியவாறு எட்டிப்பார்க்கும் உன் நினைவுகள். தனிமையின்
துணைக்குக் கைக்கொடுக்கும் வானொலி. மென்மையாய் முடுக்கிப்பார்க்கிறேன். அலைஅலையாய்ப்
பழைய பாடல்களின் அணிவகுப்பு. இதயத்தை மயிலிறகாய் வருடிய உணர்வு. தேனாடைகளைச் சுவைத்த
உணர்வு. ஐம்புலன்களும் தேன்மழையில் நனைந்த பிரமிப்பு. ஒவ்வொரு பாடலும் ஆத்மார்த்தமாய்
உள்ளுக்குள் உன் ஞாபக பக்கங்களைப் புரட்டியவாறு. பாடலில் மெய்மறந்து இன்னொரு உலகத்தில்
உலாவிக்கொண்டிருந்தேன் எங்கும் உன் குரல்தான் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
நிசப்தத்தில்
பழைய பாடல்கள்
இரவின் நிசப்தத்தில்
தேனாய் ஒலிக்கும்
இதயத்தின் மூலையில்
உனது குரல்
உன் ஞாபக மழையில் 5.
உன்
நினைவுகளாய் உள்ளுக்குள் ஆயிரம் ஆயிரம் கவிதைகள். அமுத சுரபியாய் நீ. உன் நினைவுகளில்
நான். அழையாத விருந்தினராய் கவிதை வரிகள். இந்தக் கவிதை வரிகள் ஒரு மௌனத்தின் முகவரி.
உள்ளுணர்வுகளின் மொழிபெயர்ப்பு. கரையினைத் தொட்டு முத்தமிடும் அலைகளாய் மனக்கரைகளை
உசுப்பியவாறு உன் நினைவுகள். எழுத வேண்டும், அவற்றைப் படம் பிடித்து உனக்குக் காட்ட
வேண்டும். ஆவலில் குதிக்கும் மனம். எங்கிருந்து தொடங்குவது? எப்படித் தொடங்குவது? என்றெல்லாம்
குழம்பியவாறு மனம். எனது கவிதைகள் என்னை உனக்கு அடையாள காட்ட வேண்டும். எனது கவிதைகளில்
நீ தான் வாழ்கிறாய் என்பதும் உனக்குள் வெளிச்சமாக வேண்டும். என் நினைவுகளை அந்தக் கவிதைகள்
உனக்குள் விதைக்க வேண்டும். மொத்தத்தில் நான் கவிதையென்றால் அந்தக் கவிதை நீதான் என்று
உணர வேண்டும். தூவலும் தேடிய தாளும் கையில். உன் ஞாபக மழையில் நனைந்தவாறே எழுதிப்பார்க்கிறேன்
உன் பெயரை.
கவிதை
ஒவ்வொரு முறையும்
கவிதை எழுதும்போது
முதல் வரியில்
உனது பெயரைத்தான்
எழுதுகிறேன்
உன் ஞாபக மழையில் 6.
காதலில்
தொலைந்துபோனவனாய் நான். உடல் முழுவதும் உன் நினைவுகளாய் விரவியிருந்தது. மனம் உன் நினைவுகளில்
தோய்ந்து போயிருந்தது. உன் நினைவுகள் பௌர்ணமியாய் உள்ளுக்குள். சொல்லாத முடியாத, விவரிக்க
முடியாத மெல்லிய நினைவுகள் அவை. எல்லா திசைகளிலும் பார்வையை வீசியவாறு என் கண்கள்.
மனம் அதன் தேவையைக் கண்களுக்குச் சொல்லி வைத்திருந்தது. அதனால் எனக்குக் கட்டுப்படாத
என் கண்கள் காட்டாற்று வெள்ளமாய் எல்லா இடங்களிலும் ஊடுருவிக் கொண்டிருந்தது. கண்களின்
தேடல். நீ வருகின்ற திசையை நோக்கி அவை தவமிருக்கின்றன. எங்கே நீ கடந்து விடுவாயோ என்ற
அச்ச உணர்வில் தாளிடாமல் உன் நினைவுகளோடு விழித்திருக்கும் இமைகள் உன் ஞாபக மழையில்.
இமைக் கதவுகள்
எப்பொழுது வருவாய்?
எதிர்ப்பார்ப்புகளோடு
திறந்தே கிடக்கும்
இமைக் கதவுகள்
உன்
ஞாபக மழையில் 7
அது
ஒரு மாலை. காலார கடற்கரையில் உலாவி வருவதற்குப் புறப்பட்டேன் உன் நினைவுகளோடு. அமைதியாய்
கடல் எனது வருகையை எதிர்பார்த்தவாறு. மெல்லிய அலைகள் கரையைத் தேடியவாறு. கடலன்னையின்
சீதனம் உனக்கு. எவ்வளவு அழகு. பால் பொங்கும் புன்னகையோடு என்னை வரவேற்றவாறு. நிலைகுத்திய
கால்களோடு அங்கேயே சிலையாய் நான். அலைகள் ஒவ்வொன்றாய் என் பாதங்களை வருடியவாறு. அந்த
ஈரப் பசை பாதங்களில் கோலம்போட்டு மனதை ஈரமாக்கியது. பாதங்கள் நனைந்தவாறு அலைகளை ஊடுருவினேன்.
ஒரு மொழி. எனக்கு மட்டும் புரிவதுபோல். அலைகள் பேசின. உன்னை விசாரித்தவாறு. நீ என்றால்
அவற்றிற்கு மிகவும் பிடிக்குமாம். காது மடல்களில் அலைகளின் மொழி உரசியவாறு, அலைகளின்
உயரம் அதிகரிக்க இப்பொழுது உடலும் நனையத் தொடங்கியது. அந்தச் சுகமான குளிரில் நனைந்தவாறு
நான் உன் ஞாபக மழையில்.
அலைகளாய்
அலைகளாய்
ஆர்ப்பரிக்கும்
உனது நினைவுகள்
உள்ளக் கரைகளை
அடிக்கடி மோதும்போது.
உன் ஞாபக மழையில் 8
காலம்
கறைகிறது உன் ஞாபகங்களோடு. காலை இளம்பரிதியாய் எழும் உன் நினைவுகள் இரவு வானத்தில்
இமையாது விழித்திருக்கும் நட்சத்திரம் தொட்டு, வியலின் வெள்ளி முளைக்கும்வரை நெடுங்கதையாய்
வளர்கிறது. ஞாபகமில்லை உன்னை மறந்ததாய். நாட்கள் நகர்வதும் கடிகாரத்தின் முட்கள் புணர்வதும்
கனவாய், எதுவுமே நினைவிலில்லை. டைரியின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கிறேன். ஒவ்வொரு
பக்கத்திலும் உன் பெயர் மட்டுமே ஒட்டியிருக்கிறது. உன் நாமத்தைப் பதியம் செய்வதோடு
அடுத்தப் பக்கம் நகர்கிறது ஒரு அடுத்த நாளில். படுத்து எழுகின்ற சாக்காடு வாழ்க்கை.
இருந்தும் மனதிற்குள் நிறைவு. மன டைரியின் ஏடுகள் கனக்கின்றன உன் நினைவுகளைச் சுமந்தவாறு
நானும் உன் ஞாபக மழையில் நனைந்தவாறு முந்தும் நாட்கள்.
மன டைரி
நாட்கள்
நகர்கின்றன
மன டைரியில்
உன் ஞாபக ஏடுகளைக்
கூட்டியவாறு
உன் ஞாபக மழையில் 9
ஒரு
பொழுது புலர்கிறது. வெள்ளி முளைத்ததும் அனைத்து அசைவுகளும் தொடங்குகின்றன. சோம்பல்
முறித்த பறவைகள் விழித்துக்கொண்டு, கிழக்கு வானில் பாடியவாறு சிறகுகளை விரிக்கின்றன.
தூங்குமூஞ்சி மரங்களும் நித்திரை நீங்கி காலைப் பனியில் முகங்கழுவி ஈரக் கூந்தலினை
காற்றில் உலர்த்தியவாறு உலகை வெறிக்கின்றன. ஓரறிவு முதல் ஆறறிவு வரை எல்லாமே விழித்துக்
கொண்டு தத்தம் கடமைகளை நிறைவேற்ற பயணப்படுகின்றன. உதய சூரியன். காலையின் அடையாளம்.
உயிர்களின் புதிய நம்பிக்கை. இருட்டைக் கிழித்து உலகை வெளிச்சப்பாதையில் நகர்த்த வந்த
தீர்க்கதரிசி. அதன் ஒளிக்கரங்களில் நேசத்தின் முகவரி. இதமான ஒளிக்கீற்றுகள் இந்தப்
பூழிப் பந்தின் மேனியெங்கும் கீறல் போடும்போது நானும் விழித்தெழுகிறேன். ஒரு புதிய
நாள்; புதிய அத்தியாயத்தின் தொடக்கம். உன் ஞாபக மழையில் நனைந்தவாறு ஒரு ஒளிக் குளியல்.
சூரிய உதயம்
அடிவானில்
சூரிய உதயம்
விழித்துக் கொண்டேன்
உன் நினைவிகளோடு
உன் ஞாபக மழையில் 10.
உனது
நினைவுகளால் என் தேடல்கள் விரிகின்றன. ஒவ்வொரு நாழிகையும் உன்னைத் தேடுவதிலேயே கழிகின்றது.
நீ பயணப்படும் திசைகளிலெல்லாம் சிறகு விரிக்கும் என் மனப்பறவை. நிழலாய் உன்னைத் தொடர்கின்றேன்.
உன் ஞாபக மழையில் என்றோ தொலைந்தவன் நான். இனியும் என்னைத் தேடப்போவதில்லை. நான் தொலந்தவனாகவே
இருக்கட்டும். எனது இலட்சியமே உன்னைத் தேடுவதுதான். எட்டுத் திசைகளிலும் என் பார்வைகள்
பேசுகின்றன. நீ நடந்து செல்லும் பாதையெங்கும் என் மனச்சோலை மலர் தூவி கவிதை பாடுகின்றது.
சொல்லிக்கொள்ளாமலேயே ஏக்கம் என்னுள் வேர்விடுகிறது. உன் சுவடுகள் எனக்குள் சூடு போடுகின்றன.
தொடர்கின்றேன் தேடியவாறு. உன் நிழலில் குளிர்காய வேண்டும் என்று துள்ளும் மனசு. உன்
நிழலினைத் தொடர்ந்தவாறு உன் ஞாபக மழையில் நான் பாதங்களை அடுக்கியவாறு.
சுவடுகள்
கால்கள் பயணப்பட்டன
உன் சுவடுகளைப்
பின்தொடர்ந்து
உன் நிழலையாவது
தொட்டுவிட வேண்டும்
அவசரப்படுத்தும் மனம்.
உன் ஞாபக மழையில் 11.
உன்
ஞாபக மழையில் நனைந்துகொண்டே இருக்கும்போது மனச் சாளரங்களை எவ்வாறு மூடி வைப்பது. அது
காலமெல்லாம் திறந்தே கிடக்கிறது என் வீட்டுச் சாளரங்களைப்போல. நான் அதை மூடியதாய் நினிவிலில்லை.
உன் சுவாசக் காற்று என் வீட்டின் அறைகளையெல்லாம் நிரப்ப வேண்டும் என்பதற்காகவே அதை
திறந்தே வைத்திருக்கின்றேன். ஒவ்வொரு நாளும் உன் சுவாசக் காற்று உள்ளே எட்டிப்பார்க்கிறது.
திறந்த சாளரங்களின் வழி என் பார்வையைத் தூது விடுகின்றேன். வீதியில் உன் நடமாட்டத்தைத்
தேடும் பீதியில் மனம். சாளரங்களில் என் முகத்தைப் புதைத்து விழிகளைப் பதியம் செய்கின்றேன்.
நீ அடிக்கடி வந்து போகும் வீதி. உன் பாதங்களுக்கு நன்கு பழக்கப்பட்ட தெருக்கள். நீ
வந்து போகும் மணித்துளிகள். எல்லாவற்றையும் உள்ளுக்குள் சேகரிக்கின்றேன். நீ வருகின்ற
திசையை நோக்கி தவமிருக்கும் என் விழிகள் உன் ஞாபக மழையில் நனைந்தவாறு; திறந்தே கிடக்கும்
என் சாளரங்கள்.
சாளரங்கள்
என் வீட்டுச்
சாளரங்களை
நான் மூடுவதே கிடையாது
ஒருமுறை
நீ எதிர்வீட்டுக்கு
வந்து போனதிலிருந்து.
உன் ஞாபக மழையில்.
உன் ஞாபக மழையில் 12.
உன்னுடன்
அடிக்கடி பேசிக்கொள்கிறேன். கைப்பேசி என்னை உயிர்ப்பிக்கிறது. உன் அழைப்பிற்காகவே விழித்திருக்கும்
என் காதுமடல்களும் என்னைப்போலவே. உன் அழைப்பிற்கு என்று ஒரு பாடலைப் பதிவிறக்கம் செய்திருக்கின்றேன்.
ஒவ்வொரு முறையும் நீ அழைக்கும்போது அந்தப் பாடல் வரிகள் நீ பாடுவதைப்போலவே இருக்கிறது.
உன் அழைப்பிற்காகவெ என் கைப்பேசியும் இரவெல்லாம் என்னோடு விழித்திருக்கின்றது. உன்
அழைப்பு வராத மணித்துளிகளில் பத்திரப்படுத்திய உன் குறுஞ்செய்திகளை ஒவ்வொன்றாய் மீண்டும்
மீண்டும் எழுத்துக்கூட்டி வாசித்துப் பார்க்கிறேன். அவை உன் ஞாபகத்தின் காவியங்கள்,
மீண்டும் எழுத முடியாத ஓவியங்கள். என்னை உயிர்ப்பிக்கும் பிரமாக்கள். உன் நினைவுகளை
அசைப்போட்டவாறு, உன் ஞாபக மழையில் நனைந்தவாறே என்னோடு விழித்திருக்கும் என் கைப்பேசியும்.
கைப்பேசி
உன்
குறுஞ்செய்திக்காக
இரவெல்லாம்
விழித்திருக்கும்
என் கைப்பேசி.
உன் ஞாபக மழையில் 13
சேர்ரிப்
பழம் போல உன் உதடுகள். நீ பேசும்பொழுதெல்லாம் உன் உதடுகளில் என் பார்வை. எவ்வளவு அழகு.
கொள்ளை அழகு. சாயம் பூசப்படாத இயற்கையாய் அவை என்னை வெறிப்பதைப்போலவே எனக்குள் ஓர்
உணர்வு. நீ உச்சரிக்கும் வார்த்தைகள் உன் உதடுகளை உரசிக்கொண்டு எட்டிப்பார்க்கும்போது
இனிக்கின்றன, தேனாய். நீ பேசும் சமயம்தான் தமிழின் இனிமையை நான் இரசிக்கக் கற்றுக்
கொண்டேன். என் கவிதைகளும் உன் உதடுகள் எனக்குக் கற்றுக் கொடுத்த பாடம். அவை எளிதில்
என் வசப்படுகின்றன. யாப்பிற்கு அப்பாற்பட்ட எளிய மொழி அது. அதனால் மிக எளிதில் பதியம்
செய்யமுடிகிறது. எதுகை, மோனை, தளை, சீர் என்றெல்லாம் அணிகள் தேவையில்லை. உனகுள்ளிருந்து
உதிர்ந்த சொல்மலர்களைக் கவிதை மாலையாகத் தொடுக்கின்றேன். எவ்வளவு நேர்த்தி. எனக்குள்
வியப்பு. உன் பெயரே எனக்குள் கவிதையாய். தனிமையில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணித்துளியும்
உன் பெயரை உச்சரித்துப் பார்க்கிறேன். துடிக்கும் என் இதழ்கள் உன் ஞாபக மழையில் நனைந்தவாறே.
உதடுகள்
உன் பெயரை
உச்சரிக்கும்போதெல்லாம்
ஒட்டிக் கொள்கின்றன
உதடுகளும்.
உன் ஞாபக மழையில் 14
உன்னுடைய
தகவல்களுக்காக நான் பரிதவித்த நாட்கள் ஏராளம். அவை அந்த வானமண்டலத்தில் உள்ள நட்சத்திரங்களைப்
போல விரல் விட்டு எண்ணி விட முடியாது. ஒவ்வொரு முறையும் உனக்குக் கடிதம் போட்டு விட்டு
பதிலுக்காக நான் விழித்திருந்த இரவுகளை மறக்கமுடியாது. எப்பொழுது விடியும், எப்பொழுது
தபால்காரர் வருவார் என்ற எதிர்பார்ப்புகள் என் பொழுதுகளை நீடிக்கச் செய்கின்றன. வழிமேல்
விழிகளைப் பதியம் செய்து சுட்டெரிக்கும் உள்மூச்சுக்காற்றோடு என் வீட்டு வாசலில் ஒற்றைக்
காலில் மோன தவமிருக்கும் கொக்கைப்போல நானும் தவமிருப்பேன். உயிர் போய் வருவதைப்போல
உணர்வு. எல்லாத் தெருக்களையும் அலசிவிட்டு இறுதியாய் என் தெருவிற்குள் நுழையும்போது
உயிர் மூச்சின் இறுதிச் சொட்டு விழுவதைப்போல மனதிற்குள் கலவரம். உன் ஞாபக மழையில் நனைந்தவாறு
நான் உன் தபாலுக்குக் காத்திருக்கும்போது என் தபால்பெட்டியும் ஆயிரம் ஆயிரம் எதிர்பார்ப்புகளோடு.
தபால் பெட்டி
தபால்காரர்
தெருவிற்குள்
நுழையும் பொழுதெல்லாம்
ஆவலோடு எட்டிப்பார்க்கும்
என் தபால் பெட்டியும்.
உன் ஞாபக மழையில் 15
காய்ந்த
பூமி. வரண்ட மண். சுட்டெரிக்கும் வெயில். கடுமையான கோடை. ஊருக்குள் வேதனை. வானம் பார்த்த
பூமியாய் மக்கள். மழை தேடல்கள். ஒரு சொட்டவது விழாதா என்ற எதிர்பார்ப்புகள். மேகங்கள்
புணர்வதையும் விலகுவதையும் வேடிக்கைப்பார்த்த வண்ணம் ஊர் மக்கள். ஏமாற்றங்களோடு நகரும்
நாட்கள். ஆனால் என்றாவது மழை விழும் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் பூப்பூத்துக் கொண்டிருந்தது.
ஒரு முறை ஊரை முற்றுகையிட்டன மழை மேகங்கள். பேய் மழை பெய்வதற்கான அறிகுறி. இடியும்
மின்னலுமாய் வெடித்துச் சிதறிய வானத்தைக் கண்டு மக்கள் மகிழ்ச்சி வெள்ளம். நீண்ட நேர
முன்னறிவிப்புகள். மழை வந்தபாடில்லை. பலத்த காற்று. வேரோடு சாயும் விருட்சங்கள். கொஞ்சமாய்
நகர்ந்த மழை மேகங்கள் வேறு திசையை நோக்கி . ஏமாற்றம். மழை காணா முகங்களில் வேதனை வடுக்கள்.
எனக்கும் வருத்தம் ஊருக்குள் மழையில்லையென்று ஆனால் உள்ளுக்குள் நனைந்துகொண்டிருந்தேன்
உன் ஞாபக மழையில். உள்ளம் குளிரால் நடுங்கியது.
வருத்தம்
கலைந்துபோகும்
மழை மேகங்கள்
ஊருக்குள் வருத்தம்
உன் ஞாபக மழையில்
நனையும்
நான்.
உன் ஞாபக மழையில் 16.
ஒரு
மாலை. மழை வருவதைப்போல் பரபரப்பு. ஆரவாரமாய் நகரும் கூட்டம். ஆடிவானில் அலறியடித்துக்கொண்டு
கூடுகளுக்குத் திரும்பும் பறவைகள். மிரட்டிக் கொண்டிருந்த வானம் முவுரையாய்த் தூறல்
போடத் தொடங்கியது. எங்கும் எல்லாமே நனைந்தவாறு. நீண்ட நாட்களுக்குப் பிறகு தலை குளியலுக்குத்
தயாராகும் மரங்கள். சகதிப்பொட்டுக்குத் தயாராகும் மண்தரைகள். இறகுகளைச் சலவைச் செய்யும்
வண்ணத்துப்பூச்சிகள். மழைகீதம் பாடும் மழைக்குருவிகள். இப்படி இயற்கையின் ஒவ்வொரு கூறுகளும்
இயற்கை மழையில் நனைந்து இன்பங்களை நுகர்ந்தவாறு, நான் மட்டும் வீட்டிற்குள்; உன் வருகையை
எதிர்பார்த்தவாறு. அவசர அவசரமாய் நீ வந்து கொண்டிருந்தாய். கையில் குடையில்லை. மழைத்துளிகள்
உன்னை மொய்த்துக்கொண்டிருந்தன. எனக்கு தும்மல் வந்து வந்து போனது.
தும்மல்
நீ
மழையில் நனைந்தபோது
வந்து வந்து போனது
எனக்குள் தும்மல்.
உன் ஞாபக மழையில் 17.
குளக்கரையோரம் ஒவ்வொரு மாலையும் உன்னை எதிர்பார்த்தவாறு.
காத்திருப்பது சுகமானது. இந்த இயற்கையைக் கொஞ்சம் இரசிக்க முடிகிறது. இது நீ கற்றுக்
கொடுத்தப் பாடம். நீயும் இந்த இயற்கையாய் பல மாறுபட்ட கோணங்களில் உன்னை அலங்கரித்துக்
கொண்டிருக்கிறாய். இந்த இயற்கையில் உன்னைப் பார்க்கிறேன். அந்த அழகு மொத்தமாய் உன்னிடத்தில்.
தெளிந்த நீர். ஆவலோடு எட்டிப்பார்க்கும் மீன்கள். என்னோடு அவையும் காத்திருக்கின்றன
உன் வருகைக்காக. அவற்றைப் பிடிக்க மறந்து என்னையே வெறித்துக்கொண்டிருக்கும் மீன்கொத்திப்
பறவைகள். கிளைகளில் அமர்ந்தவாறு பாடிக்கொண்டிருக்கும் ஜோடிக் குயில்கள். மெல்லியதாய்
காற்று. வருடிய குளத்தின் மேனி. எழும்பிய உணர்வுகளாய் மெல்லிய அலைகள் என்னை நோக்கி.
உன் ஞாபக மழையில் நனைந்தவாறு நான்.
அலைகள்
குளக்கறையில்
ஒரு சாயுங்காலம்
காற்றில் மெல்லிய
அலைகள்
உன் நினைவுகளாய்.
உன் ஞாபக மழையில் 18.
உன்னைப்
பிடித்திருப்பதைப்போல் வசந்த காலமும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உன்னுடன் வசந்த
காலத்தில் உலா வந்த அந்தப் பூஞ்சோலைகள் இன்னும் உள்ளுக்குள் பசுமையயாய் மணம் வீசுகின்றன.
பூஞ்சோலையில் உன்னுடன் நகர்ந்த அந்த ஞாபக நாள்கள் அடிக்கடி மனதிற்குள் பூப்பூக்கின்றன.
நீ இல்லாத நாட்களில் நான் மட்டும் தனிமையில் அந்தப் பூஞ்சோலையில்; உன் ஞாபங்களைத் திரட்டியவாறு.
மௌனமாய் உலா வருகிறேன். எல்லா பக்கங்களிலும் உன் ஞாபக எதிரொலிகள். பூத்துக் குலுங்கும்
வண்ண வண்ண பூக்கள். பாடியவாறு சிறகு விரிக்கும் காதல் பறவைகள். வானவில்லில் தோய்த்தெடுத்த
வண்ணத்துப் பூச்சிகள். போதையில் தள்ளாடும் வண்டுகள்.இலைகளைக் காற்றில் உதிர்க்கும்
விருட்சங்கள். இன்று எல்லாமே அந்நியமாய் நீ என் பக்கத்தில் இல்லாதபோது. உன் ஞாபக மழையில்
நனைந்தவாறு நான் மட்டும் தனிமையில் அந்தப் பூஞ்சோலையோடு.
தனிமை
வசந்த காலத்தில்
ஒரு பூஞ்சோலை
வெறுச்சோடிப் போயிருந்தது
நான் மட்டும் தனிமையில்
நீ இல்லாததல்
உன் ஞாபக மழையில் 19.
நாணம்;
பெண்மையின் அணிகலன். உன் நாணம் எனக்குப் பிடித்திருக்கிறது. நமது சந்திப்புகளில் நீ
தரைகளில் முகத்தைப் பதியம் செய்கிறாய். முகத்தில் முகம் பதியம் செய்வது மிகவும் அரிது.
நான் காதல் மொழி பகரும்போது நீ மண்ணைப் பார்க்கிறாய். சற்று முகம் திருப்பி வானம் பார்த்தால்
கள்ளத்தனமாய் என் முகம் பார்க்கிறாய். என்றோ படித்த வள்ளுவனின் குறள் நினைவு பெட்டகத்தில்.
ஓர் இரவு. நீ என்னுடன் இல்லாத தனிமை. வானை அலங்கரிக்கும் நிலவு மங்கை. அந்த மோன அழகைப்
பருகியவாறு நான் உன் ஞாபக மழையில் நனைந்துகொண்டிருந்தேன். அழகு; உலகத்தின் மொத்த அழகும்
அந்த நிலவின் மீது. அதுவும் தனிமையில் உலா வந்ததது என்னைப்போலவே. நான் வெறிப்பது எப்படியோ
அதற்குத் தெரிந்து விட்டது. மெல்ல நகர்ந்தது. தனது சிவந்த கன்னங்களை மேகங்களுக்குப்
பின்னால் மறைத்துக் கொண்டது. அங்கிருந்தபடியே கள்ளத்தனமாய் என்னைப் பார்த்து சிரித்துக்
கொண்டிருந்தது. என் ஞாபக மேகங்களில் தூறல் போட்டது உன் முகம்.
- நாணம்
பௌர்ணமிக் காலம்
நிலவை
வெறித்துப் பார்த்தேன்
மேகங்களுக்குள்
முகம் புதைத்தது
நனவு மேகங்களில்
நீயும்.
ஞாபக மழையில் 20
என்
தனிமை தாகத்தைத் தீர்க்கும் அமுதமாய் உன் முகம். உன் காதலில் மனம் காயப்படவில்லை. காதல்
வயப்பட்டது. என் ஞாபக சீப்பில் உன் நினைவுகளைச் சீவிப்பார்க்கிறேன். நேர்த்தியாய் வகிடு
எடுத்தாற் போல உன் வைரமுகம். அடிக்கடி மனப்பேழைக்குள் பட்டைத்தீட்டி பத்திரப்படுத்துகிறேன்.
நீ எழுதிய கடிதங்கள் இமாலாவாய்க் குவியல். நிதானமாய் வாசிக்கின்றேன்; சுவாசிக்கின்றேன்.
அவை கடிதங்களா? இல்லை கவிதைகள். இன்ப அதிர்வலைகள் உள்ளுக்குள். எத்தனை முறை வாசித்தாலும்
சலிப்புத்தட்டாத காவியங்கள். காதல் முகவரியை எனக்கு அடையாளம் காட்டும் திசைக்காட்டிகள்.
ஒவ்வொரு வரிகளிலும் காதல் மழை. உன் காதல் மழையில் நனைந்தவாறு கடிதங்களைப் புரட்டுகின்றேன்
மனதிற்குள் தூறல் போடும் உன் முக மேகம்.
- உன் முகம்
பழைய கடிதங்கள்
மீண்டும் மீண்டும்
வாசித்துப் பார்க்கிறேன்
நேற்றைய நினைவுகளாய்
உன் முகம்.
உன் ஞாபக மழையில் 21
காதலில்
சந்திப்பு என்பது ஒரு விபத்து. இங்கு வெளிக் காயம் என்பது கிடையாது. எல்லாமே உள் காயம்தான்.
மனம் காயப்படுகிறது. நமது விழிகளின் மோதல் நம்மை முடமாக்குகிறது. வெளியில் யாரிடமும்
வாய்விட்டுச் சொல்ல முடியாத ஊமை காயம். ஒரு சுகமான வேதனை; சுவாசப் பைகள் நிறைகின்றன
ஞாபக சில்லறைகளில். முதல் சந்திப்பு நமது வாழ்க்கையில் ஒரு வரலாறு; மீண்டும் மீண்டும்
மீள்பார்வை செய்வதைப்போல் திரும்பிப்பார்க்கச் செய்கிறது. தவமாய் தவமிருக்கும் விழிகள்
அடுத்த சந்திப்பிற்கு. யுகம் யுகமாய் வந்து போகும் மானுட அனுபவங்கள். முதல் சந்திப்பு
உள்ளுக்குள் முள்ளாய்த் தைக்கிறது. வெளியில் பிடுங்கி எறிவதற்கு மனம் தவிக்கிறது. அது
எப்படி உன்னில் மட்டும் எனக்கு இந்த விபத்து. இதுவரை யாரிடமும் காயம்படாத மனது எள்ளி
நகையாடியது. உன் ஞாபக மழையில் நனைந்தவாறு காயம் பட்ட மனதை உன் நினைவிறகால் வருடுகிறேன்.
- விபத்து
நமது
முதல் சந்திப்பு
ஒரு விபத்து
பலத்தக் காயம் எனக்கு
காலமெல்லாம் ஊனமானேன்
உனது நினைவுகளோடு.
எனது உணர்வுகளை உன் ஞாபக
மழையில்.
நமது
காதல் இரகசியம்; யாருக்கும், ஊருக்கும் தெரியாதது. உன் கடைக்கண் பார்வையில் நான் உன்
வயப்பட்டேன். என் மௌனம் சொற்களை நாடு கடத்தியது. சொல்வதற்கு வார்த்தைகள் இல்லா தவிப்பு.
உனக்கு எப்படி? உன் உணர்வலைகள் நான் உள்வாங்கிக் கொள்வதற்குமுன் என் அவசரமும் பதற்றமும்
என்னை நிறுத்தியது. என்னைச் சற்று நிதானித்துக் கொண்டேன். உன் உணர்வுகளை மெது மெதுவாய்
உள்ளுக்குள் விழுங்கினேன். என்னைச் சுற்றியே வட்டமிடுகின்ற நட்பு முகங்களுக்கு அதை
அடக்கமாய் மறைத்துவைத்தேன். சின்ன சின்ன அலைகளாய் உன் உணர்வுகள் உள்ளுக்குள் கண்சிமிட்டி
வேடிக்கைக் காட்டுகின்றன. உன்னிடமும் சொல்ல முடியவில்லை; வேறு யாரிடமும் சொல்லத் துணிவில்லை.
எனக்குள் இரகசியமாய் உன் உணர்வுகள் உன் ஞாபக மழையில் நனைந்தவாறு.
- இரகசியம்.
பெண்ணே
காதல் உள்ளுணர்வுகள்
என்பதால்
எனக்குள் இரகசியமாய்
வைத்திருக்கிறேன்
உன் ஞாபக மழையில் 23.
காதல் ஆழமானது. அளந்தவர் யாரும் கிடையாது. அதற்கு
இணையாக எதையுமே கொண்டுவந்து சேர்க்க இயலாது. உன் மன ஆழத்தை நானோ அல்லது என் மன ஆழத்தை
நீயோ அளக்கமுடியாது. அந்த உணர்வுகள் அளவைக்கு அப்பாற்பட்டது. உனக்கு எப்படிச் சொன்னால்
புரியும்? எப்படி உனக்கு விளங்கவைப்பது? கேள்வி மழையில் நனைந்தவாறு என் உள்ளம். உனக்கு
ஏதாவது ஒன்றைக் காட்டி என் காதலின் ஆழத்தை காட்ட வேண்டும். அப்பொழுதுதான் நான் உன்னுள்
ஆழமாய் வேர்விட முடியும். உன் நம்பிக்கைக்கு நான் ஒரு வட துருவ மீனாய் மிளிர வேண்டும்.
ஆவல் ததும்பலில் மனம். கடலைப் பார்க்கிறேன். எவ்வளவு ஆழம். அதற்குள் எவ்வளவு இரகசியம்.
உன் ஞாபக மழையில் நனைந்தவாறு கடலின் ஆழத்திற்கு உன்னை அழைக்கின்றேன் என் காதலின் ஆழம்
காட்டுவதற்கு.
- ஆழம்
என்னோடு வா
ஆழ்கடலின்
ஆழத்தை அளந்து
காட்டுகிறேன்
அப்பொழுதாவது
நமது காதலின்
ஆழம்
உனக்குத் தெரியும்.
உன் ஞாபக மழையில் 24.
நிலவும் நட்சத்திரங்களும் நமது காதலுக்கு சாட்சி. நமது மாலை சந்திப்புகளில் அவை
அழையாத விருந்தினராய் நம்மோடு வருவதை நாம் தடுப்பதில்லை. அவை நமக்குக் கற்றுக் கொடுத்த
காதல் மொழி எவ்வளவு. ஒன்றா இரண்டா? ஒவ்வொன்றும் மறுப்பதற்கில்லை. நமது காதல் வாழ்வில்
ஒளியேற்றிய தீர்க்கதரிசிகள் அவை. மறந்தும் அவற்றை நாம் வெறுப்பது கிடையாது. நிலவு மட்டும்தான்
நமக்குள் நிலைத்திருக்கிறது. நெஞ்சத்தைக் கொள்ளை கொள்ளும் அழகு. வான மண்டலத்திற்கு
அப்பால் எவ்வளவு தூரம். இருந்தும் நம் பார்வைக்குப் பக்கத்திலேயே நம்மோடு கைகோர்த்து
நிற்கிறது. யாரும் இல்லாத தேசம் அது. மனிட நடமாட்டத்திற்கு அப்பாற்பட்டது. நாமும் அங்குப்
போக வேண்டும். அந்தத் தனிமையில் நமது காதல் பகிர்வுகள் அமைய வேண்டும். உன் ஞாபக மழையில்
நனைந்தவாறு உன்னோடு கைக்கோர்த்த வண்ணமாய் நிலவு மண்டலத்திற்குள் நான்.
- இலவசம்
இரண்டு
டிக்கட்டுகள்
எனக்கு இலவசம்
வருகிறாயா?
என்னோடு
சந்திர மண்டலத்திற்கு.
உன் ஞாபக மழையில் 25.
தனிமையில் ஆறுதலாய் உன் நினைவுகள். உன் மோனத்தைப்
படம்பிடித்துக் காட்டும் உன் நிழற்படங்கள். கையில் ஏந்தியவாறு உன் நினைவுகளைப் பருகினேன்.
மனதிற்குள் பதிவானது உன் ஒளி கொஞ்சும் முகம். உள்ளுக்குள் ஒளி வீசுவதைப்போல் உணர்வு.
நீ நிலாப் பெண். உனக்கு வளர்பிறையும் தேய்பிறையும் கிடையாது. காலமெல்லாம் தேயாத நிலவு.
எனக்குள் மேகமூட்டங்கள் கிடையாது உன் எழிலுக்குத் திரைபோடுவதற்கு. அடிக்கடி அவற்றைப்
புரட்டிப்பார்க்கிறேன். உன் நிழற்படங்கள் என்னைப் பார்த்து புன்னகை முத்துகளைச் சிந்துகின்றன.
எவ்வளவு இன்பமான அனுபவம். ஒரு நாளா இரு நாளா? எத்தனை நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன.
உன் ஞாபக மழையில் நனைந்தவாறு மனப்பெட்டகத்தில் உன் நிழற்படங்களைப் படையலிடுகின்றேன்.
- நிழற்படம்
தேய்ந்துபோன
உன் நிழற்படங்கள்
அடிக்கடி
துடைத்த வண்ணமாய்
என்
மனப்பெட்டகத்தில்
உன் ஞாபக மழையில் 26.
உன்னை முதன் முறையாக சந்தித்தேன். மன சலசலப்பில்
வார்த்தைகள் சிக்கின. தடுமாற்றம்; திக்கி முக்காடி ஒவ்வொரு சொற்களாய் வெடித்தன. பதற்றம்
உள்ளுக்குள் கம்பளம் விரித்தது. மனதிற்குள் ஆதங்கம் அதிகமாய் பேச முடியவில்லையே என்று.
இருந்தும் கற்றுக்குட்டியைப்போல் பேசத் தொடங்கினேன். நீ ஊமையாய் வேடிக்கைப்பார்த்தவாறு.
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு சொற்கள் அருவியாய். நீ வேடிக்கைப் பார்த்தவாறு.அந்தக்
காதல் மழையில் சொட்டச் சொட்ட நீ நனையத் தொடங்கினாய். ஊற்றாய் புறப்பட்ட என் காதல் மொழியில்
நீ திகைத்தவாறு சுவைத்தாய். எவ்வளவோ பேசினான். ஒரு யுகத்துச் சொற்கள்; தமிழ் அகராதியின்
மொத்தச் சொற்களும் தீர்ந்து போயிருக்கும். அன்று நீ இரசிகயாய் எல்லாவற்றையும் இரசித்தவாறு.
இப்பொழுதெல்லாம் நான் பேசுவது குறைந்து விட்டது. நான் ஊமையாய் உன் கவிதைச் சொற்களை
உள்வாங்கிக் கொண்டு சுவாசித்துக் கொண்டிருக்கிறேன். எனக்குப் பேசப் பிடிக்கவில்லை;
நீ பேசும்போது. உன் ஞாபக மழையில் நனைந்தவாறு நீ பேசுவதை தேனாய்ச் சுவைக்கின்றேன்.
- ஊமையாய்
முதல் சந்திப்பு
தடுமாற்றம்
வார்த்தைகள்
தொண்டை குழாயை முட்ட
கற்றுக் குட்டியாய்
அதிகமாய் பேசினேன்
நீ இரசிகையாய்
இப்பொழுதெல்லாம்
நீ பேசுகிறாய்
அதிகமாய்
நான் ஊமையாய்.
உன் ஞாபக மழையில் 27.
புல் வெளி. ஈரக் காற்று. மழை வருவதுபோல் உணர்வு.
அன்னாந்து பார்த்தேன். மழை மேகங்களின் சிங்கார சிரிப்பு. சிலிர்த்த தேகம்;மெல்லிய நடுக்கம்.
நெஞ்சை ஈரமாக்கும் உன் நினைவுகளின் படையெடுப்பு. என்னைச் சீண்டிப் பார்க்கும் ஈரக்
காற்று. கண்ணங்களில் உரசிய வண்ணமாய் நகரும் காற்று. கண்ணங்களைத் தடவிப் பார்க்கிறேன்.
ஈரப் பசபசப்பு. எங்கிருந்து வந்தது. காற்றை நீ தூது அனுப்பினாயா? அல்லது காற்றுக்கு
முத்தம் பதிப்பதற்குக் கற்றுக் கொடுத்தாயா? அந்த ஈர உணர்வுகளில் குளிர்காயும் மனது.
உன் ஞாபக மழையில் நனைந்தவாறு ஈரக் காற்று உரசலில் கண்ணங்களை வருடுகின்றேன்.
- முத்தம்
மழைக்காற்று
தேகத்தை வருடியவாறு
மெல்லியதாய் நடுக்கம்
முத்தங்களைக்
காற்றில் அனுப்பினாயா?
ஈரமான கண்ணங்களை
வருடியவாறு
தனிமையில் நான்.
உன் ஞாபக மழையில் 28.
சிறகடித்துப் பறக்கும் பறவைகள்; வானில் சுதந்தரமாய்.
குளிர்காயும் இறகுகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் சுதந்திரத்தின் வரிகள். கானம் இசைத்தவாறு
வானம் முழுவதும் தனது இறக்கைகளுக்குள். மனமும் சிறகடித்துப் பறந்தது. எல்லைகளே இல்லாத
வானத்தில். இறக்கைகள் இல்லை; அந்தச் சுமை மனதிற்கு இல்லை. பறவையைப்போல் கட்டுப்பாடு
மனதிற்கு இல்லை. காலையோ மாலையோ எல்லா வேளைகளிலும் சிறகடித்துப் பறக்கிறது; நனவு வானிலும்,
கனவு வானிலும். எல்லா பொழுதுகளிலும் உன் ஞாபக சிறகுகள். மரக்கிளையில் ஒரு சோடி காதல்
பறவைகள். உன் நினைவுகளோடு பார்க்கிறேன். நெருக்கமாய், அலகுகளில் இறகுகளை வருடியவாறு.
நெருக்கத்தின் கதகதப்பு. சொட்டுச் சொட்டாய்க் காதல் மொழி. அந்த அழகில் நான் மயங்கியவாறு;
எட்டிப் பார்க்கும் உன் நினைவுகள். சற்று நேரத்தில் அவை சிறகுகளைக் கோர்த்த வண்ணமாய்
நீல வானில். உன் ஞாபக மழையில் நனைந்தவாறு சிறகடிக்கும் மனம்.
- மனச்சிறகு
மரக்கிளைகளில்
தோள் சாய்ந்தவாறு
ஒட்டி உரசும்
காதல் பறவைகள்
மனச்சிறகுகளை
வருடியவாறு
குளிர்காயும்
உன் நினைவுகள்
இரண்டும்
சிறகடிக்கின்றன வானில்.
உன் ஞாபக மழையில் 29.
சுட்டெரிக்கும் கோடை; தனிமையில் நான் நடைபயின்றவாறு
உன் நினைவுகளைத் தோளோடு சுமந்து கொண்டு. கண்கள் தேடின; இளைப்பாற மர நிழல். நடந்தவாறு
எட்டிப் பிடித்தேன் மர நிழலை. கால்கள் நிலைகுத்தின; ஓரடி கூட நகர முடியாத தளர்ச்சி.
மரத்தின் முதுகில் சாய்ந்தவாறு சரிந்தேன். சொர்க்கமாய் நிழல். மனதிற்கும் உடலுக்கும்
இதமாய். கண்களை மூடியவாறு ஒரு மோனம். தனிமை உன் நினைவுகளை அசை போட்டது. தேகத்தைத் தீண்டும்
நிழல். தணியும் வெப்பம். உன் பூங்கரங்கள் தீண்டிய உணர்வு. உன் ஞாபக மழையில் நனைந்தவாறு
நீளும் நிழல்.
- மர
நிழல்
அடர்ந்த
மர நிழலில்
இளைப்பாறினேன்
தேகம் குளிர்ந்தது
உனது ஸ்பரிசங்கள்.
உன் ஞாபக மழையில் 30.
கால்கள் பயணப்பட்டன பூக்கடையை நோக்கி. உனக்கு பூக்களைப்
பரிசாகக் கொடுக்க வேண்டும்; என் மனம் போல மென்மையானது. உனக்குள் மனம் வீசிக்கொண்டிருக்கும்
என் ஞாபகங்களைப்போல. ஒரு பூக்கடை. நின்று வேடிக்கைப் பார்த்தேன். வித விதமாய்ப் பூக்கள்.
எத்தனை நிறங்கள், எத்தனை வடிவங்கள்? ஒவ்வொன்றும் ஒவ்வொரு மணம். நாசித் துவாரங்கள் அதன்
மணத்தைப் பருகியவாறு. ஒரு கொத்தாவது உனக்கு அனுப்ப வேண்டும். கொத்துக் கொத்தாய் ஆசைகள்
உள்ளுக்குள். பூக்கள் கலவரம்; அவற்றுள் பரபரப்பு. தேனீக்களின் கொட்டம். எங்கிருந்து
வந்தன. மயிலிறகால் விரட்டியும் அவை மீண்டும் மீண்டும் பூக்களையே சுற்றுச் சுற்றி இசைத்தவாறு
இச்சையோடு. உன் ஞாபக மழையில் நனைந்தவாறு நானும் உன்னைக் கொஞ்ச நேரம் மறந்திருக்கலாம்
என்று நினைக்கும்போதெல்லாம் தேனீக்களாய் உள்ளுக்குள் ரீங்காரமிடும் உன் நினைவுகள்.
- தேனீக்கள்
பூக்கடையில்
உன் நினைவுகளோடு நான்
மொய்க்கும்
தேனீக்கள்
விரட்டியும்
தொடர்ந்து வருகிறது
எனக்குள்
உன் நினைவுகள்.
No comments:
Post a Comment